பெரம்பலூர் மருதையாற்றில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் - சீமான்
மருதையாற்றில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கிய ஆறுகளின் பிறப்பிடமாக உள்ள பச்சைமலைக் குன்றுகளின் கீழக்கணவாய், செல்லியம்பாளையம் பகுதிகளில் இருந்து உருவாகி புதுநடுவலூர், நொச்சியம், விளாமுத்தூர் , நெடுவாசல் வழியே பாய்ந்தோடி வரும் மருதையாறானது பெரம்பலூர் - அரியலூர் மாவட்டங்களில் பல சிற்றோடைகளைத் தன்னகத்தே இணைத்து வழியெங்கும் வளம் சேர்க்கிறது.
பெரம்பலூரின் அடையாளங்களுள் ஒன்றாகவும் நீர்மேலாண்மையின் சிறந்த உதாரணமாகவும் விளங்கும் சங்கிலித்தொடர் ஏரிகளில் ஒன்றான துறைமங்கலம் பெரிய ஏரியை நிரப்பி வெளியேறும் நீரானது ஓடை வழியாக நெடுவாசல் பகுதியில் மருதையாற்றோடு இணைகிறது. அவ்வோடையின் கரையில் கடந்த 2013-ம் ஆண்டு பாதாளச் சாக்கடைக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.
பெரம்பலூர் நகராட்சியில் அரணாரை, துறைமங்கலம் மற்றும் நகர்ப்பகுதிகளில் என மொத்தமுள்ள 21 வட்டங்களில் இருந்து ஒவ்வொரு நாளும் தோராயமாக வெளியேறும் 20 லட்சம் லிட்டர் கழிவு நீரானது, கழிவுநீர்த் தொட்டிகள், கழிவுநீரேற்று நிலையங்கள் உள்ளிட்டவைகள் மூலம் குழாய்கள் வழியே நெடுவாசல் அருகே அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு வந்து சேர்கிறது. அங்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரானது ஓடையில் விடப்பட்டு மருதையாற்றில் கலந்து கல்பாடி எறையூர், பனங்கூர், குரும்பாபாளையம் வழியே கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கத்திற்குச் செல்கிறது.
இக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும்போதே கடும் எதிர்ப்பு தெரிவித்த மக்களிடம், வெளிநாட்டு தொழில்நுட்பத்தில் சுத்திகரிக்கப்பட்டு வெளிவரும் நீரைக் குளிக்கலாம்; குடிக்கலாம் என்ற போலி வாக்குறுதிகளை அன்றைய ஆட்சியாளர்கள் அளித்ததை நம்பிய மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தொடங்கிய சிறிது காலத்திலேயே சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளிவரும் நீரில் துர்நாற்றம் வீசத்தொடங்கியதோடு, நீரும் கருமை நிறத்தில் வரத்தொடங்கியது. மேலும் அருகாமைக் கிணறுகள், ஆழ்துளை குழாய்கள் அனைத்திலும் நீரின் நிறமும், தரமும் மாறத் தொடங்கியது. இது தொடர்பாக நெடுவாசல் சுற்றுப்புற கிராம மக்கள் பலமுறை அரசிடம் மனு அளித்த பிறகும், பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்த பிறகும்கூட, மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
சுத்திகரிப்பு ஆலை நிர்வாகம் கழிவுநீரை சுத்திகரித்துதான் வெளியேற்றுகிறோம் என்றும், சிக்கல்கள் இருப்பின் சரி செய்யப்படும் என்றும், மாதம் ஒரு முறை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஆய்வு செய்து கழிவுநீரின் தரத்தை உறுதிப்படுத்துகின்றோம் என்பது உள்ளிட்ட பல்வேறு பதில்களைத் தொடர்ந்து நகராட்சி மூலம் கூறிவந்தது. ஆனால், கடந்த ஆண்டு பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் வெளிப்படையாகவே போதிய நிதியில்லாத காரணத்தால் கழிவுநீர் சுத்திகரிக்காமல் மருதையாற்றில் விட வேண்டிய நிலையுள்ளதை வெளிப்படையாக அறிவித்திருந்தது பெரம்பலூர் மக்களிடைய பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு இயற்கையின் அருங்கொடையான நதிநீரை மாசுபடுத்தி, சுற்றுச்சூழலை நாசப்படுத்துவது, இயற்கைக்கும், சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அனுமதித்த மக்களுக்கும் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.
மருதையாற்றில் சுத்திகரிக்கப்படாத பாதாளச் சாக்கடைக் கழிவு நீர் கலப்பதால் நிலமும், நிலத்தடி நீரும் மாசுபட்டு மக்கள் கொடும் நோய்த்தொற்றுக்கும், கொசுக்கடிக்கும் ஆளாகியுள்ளனர். அதுமட்டுமின்றி அள்ளிப் பருகிய ஆற்று நீரில், காலை வைத்தாலே அரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது. வேளாண்மை செய்ய முடியாத மோசமான சூழல் நிலவுவதுடன், கால்நடைகளுக்கு உடல்நலக்கேடும் ஏற்படுகின்றது என்பது உள்ளிட்ட சொல்லொண்ணா இன்னல்களுக்கு இன்றளவும் நெடுவாசல் சுற்றுப்புற கிராம மக்கள் ஆளாகி வருகின்றனர்.
நெடுவாசலைத் தொடர்ந்து க.எறையூர், குரும்பாபாளையம் மற்றும் கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கமும் இக்கழிவுநீரால் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாடு சுகாதாரத் துறையோ, மாசுக்கட்டுப்பாட்டு வாரியமோ, நீர்வளத்துறையயோ, மாவட்ட நிர்வாகமோ இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதுதான் மிகுந்த வேதனைக்குரியதாகும்.
ஆகவே, பெரம்பலூர் மக்களின் துயர நிலையை உணர்ந்தும், நீர்நிலைகளைப் பாதுகாத்து, நிலம், நீர், காற்று மாசுபடாமல் தடுத்து, தூய்மையான வாழிடச் சூழலை மக்களுக்கு வழங்க வேண்டியது நல்ல அரசின் தலையாய கடமை என்பதை உணர்ந்தும், தி.மு.க. அரசு மாவட்ட நிர்வாகம், நகராட்சி, சுகாதாரத்துறை, நீர்வள ஆதாரத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய அரசு நிர்வாக அமைப்புகளின் மூலம் கூட்டாக ஆய்வு மேற்கொண்டு, கழவுநீர் சுத்திகரிக்கப்பட்டு வெளியேறுவதை உறுதி செய்வதுடன், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
பாதாளச் சாக்கடை கழிவுநீரைச் சுத்திகரிக்க இயலாவிட்டால், சுத்திகரிப்பு நிலையத்தை நிரந்தரமாக மூடுவதோடு, மருதையாற்றில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.