தோழிகளுடன் குளிக்க சென்றபோது பரிதாபம்: ஏரியில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழப்பு
கிருஷ்ணகிரியில் தோழிகளுடன் ஏரியில் குளிக்க சென்ற 2 மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கீழ்மத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (41 வயது). விவசாயி. இவரது மகள் சாரு நேத்ரா (13 வயது). இவர் காரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவரது வீட்டுக்கு ஆடி கிருத்திகை திருவிழாவில் பங்கேற்க உறவினர்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். இதில் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்த பி.சி.ஏ. முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி நீலாஸ்ரீயும் (17 வயது) வந்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று காலை நீலாஸ்ரீ, சாரு நேத்ரா மற்றும் அவர்களது தோழிகள் 5 பேர் குளிப்பதற்காக கீழ்மத்தூர் அருகேயுள்ள செட்டியார் வட்டம் ஏரி பகுதிக்கு சென்றனர். ஏரியில் குளித்துக் கொண்டிருந்தபோது, நீலாஸ்ரீ, சாரு நேத்ரா இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்ததும் உடன் வந்த தோழிகள் அதிர்ச்சி அடைந்து யாராவது காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டனர். ஆனால் அதற்குள் இருவரும் தண்ணீரில் மூழ்கினர்.
இதற்கிடையே அங்கு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் ஏரிக்குள் இறங்கி 2 மாணவிகளையும் தேடினர். சிறிது நேரத்தில் ஏரிக்குள் மூழ்கிய நீலாஸ்ரீ மற்றும் சாரு நேத்ரா இருவரும் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.