ஜனவரி மாதத்திற்குள் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள குளறுபடிகள் சரிசெய்யப்படும் - டி.டி.வி. தினகரன் பேட்டி
திருமாவளவன் கடந்த ஓராண்டாக குழப்பத்தில் உள்ளார் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவில் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அ.ம.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு துணை பொதுச்செயலாளர் மாணிக்கராஜா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சந்தோஷ் குமார் வரவேற்றார். கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
முன்னதாக டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 7 மாதமாக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் அ.ம.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்து வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். எங்களுடன் ஓ.பன்னீர்செல்வம் தொடர்பில் உள்ளார். பா.ஜ.க. தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சியினரை பலப்படுத்தி வருகின்றனர். டிசம்பர் மாத இறுதிக்குள் கூட்டணி கட்சிகள் நிலைமை சரியாகிவிடும்.
தி.மு.க.வை வீழ்த்துவது தேசிய ஜனநாயக கூட்டணியின் லட்சியம். இதற்காக அமித்ஷா கடுமையாக உழைக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்று யாரை முதல்-அமைச்சராக அறிவிக்கிறார்களோ அவர்களை நாங்கள் ஏற்று கொள்வோம்.
தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளாக சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. 2026-ம் ஆண்டு தேர்தலில் அ.ம.மு.க. கால் பதிக்கும். இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி ஏற்படும்.
நாங்கள் போட்டியிடும் தொகுதிகளை கேட்டு பெறுவோம். வரும் ஜனவரி மாதத்திற்குள் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள குளறுபடிகள் பேசி சரி செய்யப்படும். திருமாவளவன் கடந்த ஓராண்டாக குழப்பத்தில் உள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் தொடர் வெடி விபத்துகளால் உயிர் பலி ஏற்படுகிறது. அதிகாரிகள் உயிர்ப்பலிகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.