ஆசிரியர் மீது மதுபாட்டிலால் தாக்குதல்: 4 மாணவர்கள் சஸ்பெண்ட்

ஆசிரியரை பிளஸ்-2 மாணவர்கள் 2 பேர் மதுபாட்டிலால் தாக்கி மண்டையை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.;

Update:2025-07-17 16:58 IST

சிவகாசி,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த திருத்தங்கல் பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் (வயது 48) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று மதியம் வழக்கம் போல் வகுப்பறையில் அவர் இருந்தபோது, பிளஸ்-2 மாணவர்கள் 2 பேர் தாமதமாக வந்ததுடன், வெளியே சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது.

எனவே வராண்டா பகுதிக்கு வந்து அந்த 2 பேரையும் அழைத்து, ஆசிரியர் சண்முகசுந்தரம் கண்டித்ததாக கூறப்படுகிறது. அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் 2 மாணவர்களில் ஒருவர் திடீரென தான் வைத்திருந்த பையை திறந்து அதில் இருந்து மதுபாட்டிலை எடுத்து கண் இமைக்கும் நேரத்தில் ஆசிரியரின் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் ஆசிரியருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து வகுப்பறையில் இருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் ஓடிவந்தனர். பலத்த காயம் அடைந்த ஆசிரியர் சண்முகசுந்தரத்தை மீட்டு திருத்தங்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் மற்றும் போலீசார், சம்பவம் நடந்த பள்ளிக்கு விரைந்து சென்றனர். பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆசிரியரை தாக்கியதாக கூறப்படும் மாணவர்கள் கடந்த ஆண்டு சரியான முறையில் படிக்கவில்லை என்றும், இந்த ஆண்டும் அப்படி இருக்காமல் நல்ல முறையில் படித்து அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்றும் ஆசிரியர் தொடர்ந்து அறிவுரை கூறி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் 2 பேரும் இந்த செயலில் ஈடுபட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி, 2 பேரையும் கைது செய்தனர். இந்த நிலையில், ஆசிரியரை மதுபாட்டிலால் தாக்கிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 மாணவர்கள், உறுதுணையாக இருந்த 2 மாணவர்கள் என மொத்தம் 4 பேரை பள்ளியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்