தூய்மைப் பணியாளர்களை கைது செய்துள்ள தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம்: ஓ.பன்னீர் செல்வம்
சென்னை மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.;
சென்னை ,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தேர்தலுக்கு முன்பு தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தூய்மைப் பணியாளர்களின் பணி ஊதியும், ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என்று தி.மு.க வாக்குறுதி அளித்திருந்தது. இது தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எண் 285-ல் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
திமுகவின் ஆட்சியே முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில், தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கையினை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்று எனது அறிக்கை வாயிலாக கேட்டுக் கொண்டிருந்தேன். இதைத் தான் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தினர். தூய்மைப் பணியாளர்களும் சென்னை மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகையில் அறவழியில் தங்களது போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வராத தி.மு.க அரசு நள்ளிரவில் ஆயிரக்கணக்கான தூய்மைப் பணியாளர்களை கைது செய்துள்ளது. இதில் பல பெண் தூய்மைப் பணியாளர்கள் மயக்கமடைத்துள்னர்.
திமுக ஆட்சியே இன்னும் சில மாதங்களில் முடிவடையவுள்ள நிலையில், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாதது கடும் கண்டனத்திற்குரியது. இந்த இலட்சணத்தில் 93 விழுக்காடு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக திமுக அரசு விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறது. மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி இடைநிலை ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி. பகுதி நேர ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி, தூய்மைப் பணியாளர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி என அனைத்து வாக்குறுதிகளும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. வாக்குறுதி அளித்ததற்கான ஆதாரம் இருந்தும் வாக்குறுதி அளிக்கப்படவில்லை என்று அமைச்சர் அவர்கள் தெரிவிக்கிறார்.முதல்-அமைச்சர் மவுனம் சாதிக்கிறார்.
தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை முதல்-அமைச்சர் அழைத்து பேச்சவார்த்தை நடத்தி, அவர்களுடைய பணி நிரந்தாக் கோரிக்கையினை உடனடியாக நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில், அவர்கள் வடிக்கும் கண்ணீர் இந்த ஆட்சியை நிச்சயம் அழித்துவிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார் .