தங்கைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு கத்திக்குத்து - அண்ணன் வெறிச்செயல்

சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-08-18 08:32 IST

மதுரை,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மீனம்பட்டியை சேர்ந்தவர் சுமன் (வயது 32). இவர் சிறுநீர் கல்லடைப்பு நோய்க்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்காக மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தனது உறவினரான மூதாட்டியின் வீட்டில் தங்கி இருந்தார். அந்த வீட்டில் மூதாட்டியின் பேத்திகளான 16 வயதுடைய இரட்டை சிறுமிகள் அவரது பாதுகாப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டில் சிறுமிகள் தூங்கி கொண்டிருந்தபோது சுமன், இருவருக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. சிறுமிகள் கூச்சலிடவே அவர் அங்கிருந்து தப்பிஓடிவிட்டார். இதில் மன வேதனையடைந்த ஒரு சிறுமி விஷம் குடித்தார். பின்னர் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுகுறித்து சிறுமிகளின் பாட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து சுமனை வலைவீசி தேடி வந்தனர். இதற்கிடையே சிறுமிகளின் உடன் பிறந்த சகோதரரான 19 வயது வாலிபர் நேற்று முன்தினம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றபோது அங்கு சுமனை கண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர், சுமனை வழிமறித்து கத்தியால் குத்தி விட்டு தப்பினார். படுகாயம் அடைந்த சுமன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக மதிச்சியம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்