தமிழகத்தில் 24 ரெயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணி; விரைவில் முடிவடையும் என தகவல்

அடுத்த மாதம் இந்த ரெயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.;

Update:2025-08-17 12:56 IST

சென்னை,

நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 1,300-க்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தெற்கு ரெயில்வேயில் 115 ரெயில் நிலையங்களில் மறுசீரமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் மறுசீரமைப்பு பணிகள் முடிந்த இந்த ரெயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த ரெயில் நிலையங்களில் புதிய முன்பதிவு அலுவலகம், நடைமேடை தளம் சீரமைப்பு, நடைபாதைகள், பார்க்கிங் வசதி, லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர்கள் உள்பட பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை பூங்கா நகர் ரெயில் நிலையம் ரூ.10.68 கோடி மதிப்பிலும், மாம்பலம் ரெயில் நிலையம் ரூ.8.70 கோடி மதிப்பிலும், கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் ரூ.14.8 கோடி செலவிலும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியபோது, ‘அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மறுசீரமைப்பு பணி நடைபெறும் அனைத்து ரெயில் நிலையங்களிலும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தெற்கு ரெயில்வேயில், சென்னை கோட்டத்தில் பூங்கா, மாம்பலம், கூடுவாஞ்சேரி ஆகிய ரெயில் நிலையங்களும், சேலம் கோட்டத்தில் சின்னசேலம், பொம்மிடி, உதகமண்டலம், மொரப்பூர், மதுரை கோட்டத்தில் காரைக்குடி, மணப்பாறை, சோழவந்தான், ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்சி கோட்டத்தில் வேலூர் கண்டோன்மெண்ட், அரியலூர், திருவாரூர் ஜங்சன், தஞ்சாவூர் ஜங்சன், பாலக்காடு கோட்டத்தில் பொள்ளாச்சி ஜங்சன், குட்டிபுரம், காசர்கோடு, பெரூக், சொர்ணூர், திருவனந்தபுரம் கோட்டத்தில் திருப்புனித்துரா, சங்கனாச்சேரி, சாலக்குடி, வடக்கஞ்சேரி என மொத்தம் 24 ரெயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணி இந்த மாதம் இறுதியில் முடிவடைய உள்ளது. அடுத்த மாதம் இந்த ரெயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்