அடுத்த தேர்தலுக்குப் பிறகு பா.ம.க. இருக்காது - அமைச்சர் மனோ தங்கராஜ்
அன்புமணியின் ஆணிவேரே உடைந்துவிட்டது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு பகுதியில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் ஆணையம் போலி வாக்காளர்களை சேர்த்திருப்பதை ராகுல்காந்தி நிரூபித்து இருக்கிறார். ஆளுகின்ற அரசு இந்த விஷயத்தில் மவுனம் சாதித்து விட்டு பொறுப்பில்லாத பதில்களை சொல்லி வருகிறது. பொதுத்துறை அமைப்புகளான அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் போன்றவை இப்படி ஒரு அரசியல் சார்பு தன்மையுடன் செயல்படுவது ஜனநாயகத்துக்கு பேராபத்து ஏற்பட்டு விட்டது என்பதை உணர்த்துகிறது.
இதை நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தீவிரமாக எதிர்க்க வேண்டும். ஜனநாயகத்தில் மிக முக்கியமானது வாக்குரிமை. அந்த வாக்குரிமையையே போலியாக பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்துக்கு வருவது என்பது மிக மோசமான காலக்கட்டம். மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் நாகர்கோவிலில் அளித்த பேட்டியின்போது, பா.ம.க. பொதுக்குழுவில் 2026-ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்குப்பிறகு தி.மு.க. ஆட்சி அகற்றப்படும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியதாக என்னிடம் கேட்கிறீர்கள். அன்புமணியின் ஆணிவேரே உடைந்துவிட்டது. சின்னகாற்று அடித்தால்கூட விழுந்துவிடும். நான் சொல்கிறேன், அடுத்த தேர்தலுக்குப் பிறகு பா.ம.க. இருக்காது என அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டமாக பதிலளித்தார்.