சென்னையில் மின்சார குளிர்சாதன பேருந்து சேவை: உதயநிதி ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்
பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து நாளை முதல் 135 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.;
சென்னையில் வியாசர்பாடி, பெரும்பாக்கம், சென்ட்ரல், பூந்தமல்லி, தண்டையார்பேட்டை ஆகிய 5 பணிமனைகளில் இருந்து மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜூன் 30-ம் தேதி முதல் கட்டமாக வியாசர்பாடி பணிமனையில் இருந்து மின்சார பேருந்து சேவையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வியாசர்பாடி பணிமனையில் இருந்து 120 மின்சார பேருந்துகள் 11 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்டமாக பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து நாளை முதல் 135 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ரூ.233 கோடி மதிப்பீட்டிலான 55 மின்சார குளிர்சாதன பேருந்துகள் மற்றும் 80 மின்சார பேருந்துகளை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இதற்காக ரூ.49.56 கோடி மதிப்பீட்டில் பெரும்பாக்கம் பணிமனை பணியாளர்களுக்கான ஓய்வறை, பராமரிப்புக் கூடம், அலுவலக நிர்வாக கட்டிடம் உள்ளிட்ட வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு மின்சார பேருந்துகளுக்கான சார்ஜிங் பாயிண்ட்கள் பொருத்தப்பட்டுள்ளன.