திருச்சி சாலை விபத்தில் 3 பேர் பலி - குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிவாரணம் வழங்கினார் கே.என்.நேரு
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்கினேன் என தெரிவித்துள்ளார்.;
திருச்சி,
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்தார். இதனையடுத்து அமைச்சர் கே.என்.நேரு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து நிவாரணத்தை அவர்களிடன் வழங்கினார்.
இது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் 5 பேர் படுகாயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றைய தினம் உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் நேரடியாக கேட்டறிந்தேன்.
இந்த நிலையில், இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதி உதவியும், படுகாயமடைந்தோர்க்கு ரூ.1 லட்சம் நிதி உதவியும் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி, திருச்சி அரசு மருத்துவமனையில் படுகாயம் அடைந்து இரண்டாவது நாளாக சிகிச்சை பெற்று வரும் 5 பேரையும் நேரில் சந்தித்து அவர்களின் உடல் நலம் குறித்து விசாரித்தேன்.
மேலும் அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் கிடைப்பதை உறுதி செய்யவும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினேன். அப்போது அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ரூ. 1 லட்சம் நிதி உதவியையும் வழங்கினேன். அதைத்தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், இந்த விபத்தில் பலியான மூவரின் குடும்பங்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், முதல்-அமைச்சர் அறிவித்தபடி அவர்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்கினேன்.
அப்போது, லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர பாண்டியன், மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் ஆகியோருடன் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர் என தெரிவித்துள்ளார்.