வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திருப்பூரில் வாய்க்காலில் குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.;

Update:2025-08-10 21:04 IST

கோப்புப்படம் 

திருப்பூர் மாவட்டத்தில் வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் பெற்றோர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், பெரியகோட்டை கிராமம், ஸ்ரீமாரியம்மன் நகரைச் சேர்ந்த மணிகண்டன் பிரபு (13 வயது) த/பெ.தினேஷ்குமார் மற்றும் காமராஜ் நகரைச் சேர்ந்த மோகன் பிரசாத் (13 வயது) த/பெ.ராமச்சந்திரன் ஆகிய இரண்டு சிறுவர்கள் நேற்று (09.08.2025) மாலை உடுமலைப்பேட்டை வட்டம், நேரு நகர், பி.ஏ.பி. வாய்க்காலில் குளிக்க சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் இன்று (10.08.2025) காலை பெரியகோட்டை கிராமம், சித்தகோட்டை பகுதியில் சிறுவன் மணிகண்டன் பிரபுவின் உடலும், உடுமலைப்பேட்டை வட்டம், ஒட்டமடம் வாய்க்கால் பாலம் பகுதியில் சிறுவன் மோகன் பிரசாத்தின் உடலும் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் பெற்றோர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்