காவல் நிலையம் அருகே வாலிபர் வெட்டி கொலை: திமுக கவுன்சிலரின் கணவர் உள்பட 5 பேர் சரண்

கடந்த ஏப்ரல் மாதம் சுதாகரை அவினேஷ் முன்விரத காரணமாக வெட்டியதால் பழிக்குப் பழி தீர்த்ததாக கூறப்படுகிறது.;

Update:2025-08-10 21:33 IST

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த அம்மனூர் பகுதியை சேர்ந்தவர் அஸ்வினி. திமுக ஒன்றிய கவுன்சிலர். இவரது கணவர் சுதாகர் (45). அதே பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். சுதாகருக்கும், அதே பகுதியை சேர்ந்த அவினேஷ் (21) என்ற இளைஞருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதியன்று தனது வீட்டின் முன்பாக நின்றிருந்த சுதாகரை திடீரென அந்த வழியாக வந்த அவினேஷ் கத்தியால் சரமாரியாக வெட்டினார். இதில், படுகாயம் அடைந்த சுதாகர், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அவினேஷ் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் நீதிமன்ற ஜாமீனில் வெளியே வந்துள்ளார். தினமும், ரத்தினகிரி காவல் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் என்கிற நிபந்தனை போடப்பட்டதால் கடந்த ஒரு வார காலமாக ரத்தினகிரி காவல் நிலையத்தில் அவினேஷ் கையொப்பமிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரி காவல் நிலையத்தில் கையெழுத்து போட வந்த அவினேஷை நோட்டமிட்ட 5 பேர் கொண்ட மர்ம கும்ப அவரை துரத்திச் சென்று ஓடஓட விட்டு காவல்நிலையத்திற்கு அருகே வைத்து கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளது.

இதில் படுகாயம் அடைந்து அவினேஷ் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதை பார்த்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ரத்தினகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவினேஷை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவினேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சூழலில் அவினேஷை வெட்டிய அரக்கோணம் ஒன்றிய கவுன்சிலரின் கணவரான சுதாகர், அம்மனூர் பகுதியைச் சேர்ந்த ரீகன், ஆனந்த், வினித், சுரேஷ் ஆகிய 5 பேர் கொண்ட கும்பல் கத்தியுடன் ரத்தினகிரி காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராணிப்பேட்டை டிஎஸ்பி இமயவர்மன், ஆய்வாளர் பார்த்தசாரதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பழிக்குப் பழியாக காவல் நிலையத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் அரங்கேறிய இந்த கொடூர சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்