சாத்தூர் அருகே அதிகாரிகள் திடீர் ஆய்வு - பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்
விஜயகரிசல்குளம் கிராமத்தில் வீடு வீடாக சென்று போலீசார் அதிரடி ஆய்வு நடத்தினர்.;
சாத்தூர்,
விருதுநகரில் சாத்தூர் பகுதியில் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் என்ற இடத்தில் நேற்று வீடு ஒன்றில் சிலர் பட்டாசு தயாரித்தனர். அப்போது, வெடி மருந்துகள் திடீரென வெடித்ததில் தீப்பற்றி கொண்டது. அது மளமளவென பரவி பட்டாசுகள் வெடித்து சிதறின.
இந்த சம்பவத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். கடந்த ஒரு மாதத்தில் ஏற்பட்ட 4 வெடிவிபத்துகளில் 16 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சமும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ. 1 லட்சமும் நிவாரணமாக முதல்-அமைச்சர் அறிவித்தார்.
இந்த நிலையில் விஜயகரிசல்குளம் கிராமத்தில் வீடு வீடாக சென்று காவல்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் 10 குழுக்கள் நடத்திய சோதனையில் 5 வீடுகளில் சட்டவிரோதமாக இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.