சென்னை டிபிஐ வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் தொடர் போராட்டம்

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்வித்துறை அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.;

Update:2025-07-17 11:22 IST

சென்னை,

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்துவரும் 12,000 பகுதிநேர ஆசிரியர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் வேண்டுமென கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. மேலும் 2021 ஆம் ஆண்டு திமுக தேர்தல் வாக்குறுதி எண் 181-இல் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.மேலும் எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் திமுக ஆட்சி அமைந்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் திமுகவின் தேர்தல் வாக்குறுதி 181-ஐ நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர், கடந்த ஒரு வாரமாக, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ., வளாகம் அருகே, 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். ஜூலை 8 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்று பின்னர் விடுவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்