ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கு: சிபிசிஐடி விசாரணையில் பரபரப்பு தகவல்
ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கு தொடர்பாக சிபிசிஐடி விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.;
சென்னை,
தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலின்போது, பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கு தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது. அப்போது சென்னை-நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி பணம் கொண்டு செல்லப்பட்ட தகவலையறிந்து பறக்கும்படையினர் தாம்பரம் ரெயில் நிலையத்தில் அந்த ரெயிலை நிறுத்தி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் சிக்கிய கணக்கில் வராத ரூ.4 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த பணத்தை எடுத்து வந்திருந்த 3 பேரை தாம்பரம் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ரூ.4 கோடி பணம் நெல்லை மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்ற தகவல் வெளியானது.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டது. நயினார் நாகேந்திரன், பாஜக நிர்வாகி கேசவ விநாயகம் உள்பட 25 பேரை சிபிசிஐடி போலீஸார் தங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். சம்மன் அனுப்பியும் விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில், பாஜக நிர்வாகிகள் எஸ்.ஆர்.சேகர், கேசவ விநாயகம், கோவர்தன் ஆகியோர் தேர்தலின்போது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு பணம் கொடுத்தது சிபிசிஐடி விசாரணையில் உறுதியாகியுள்ளது. மேலும் பாஜக நிர்வாகி கோவர்தன், ஓட்டுநர் விக்னேஷ் மூலமாக தங்கக்கட்டிக்கு பதிலாக ரூ.97.92 லட்சத்தை கைமாற்றியது விசாரணையில் தெரியவந்ததாக நீதிமன்றத்தில் சிபிசிஐடி விளக்கம் அளித்துள்ளனர். ரூ.97.92 லட்சம் பணத்தை கைமாற்ற ஹவாலா தரகர் சூரஜ் உதவியது கால் டேட்டா ரெக்கார்ட் மூலம் உறுதியாகியுள்ளது.