சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை கைது செய்யாமல் காலம் தாழ்த்துவது ஏன்? - நயினார் நாகேந்திரன் கேள்வி
காவல்துறையின் நிர்வாகச் சீர்கேட்டை முதல்-அமைச்சர் எப்போதுதான் சரிசெய்வார் என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.;
கோப்புப்படம்
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கடந்த 5 நாட்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பட்டப்பகலில் பத்து வயது சிறுமியைத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபர் குறித்த சிசிடிவி காட்சிகள் இருந்தும் இதுவரை குற்றவாளியைக் கைது செய்யாத காவல்துறையினருக்கு எனது கடும் கண்டனங்கள்!
சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த சிறுமியை நோட்டம் விட்டுக் கொண்டே பின்னால் சென்ற அந்தக் கயவன், கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுமியின் வாயைப் பொத்தி அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு தூக்கிச் செல்லும் காட்சிகள் தெளிவாகப் பதிவாகியுள்ளன. ஒரு பத்து பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ஆதாரமுமின்றி ஒரு அப்பாவியை அடித்துக் கொன்ற தமிழகக் காவல்துறை, பத்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியின் அடையாளங்கள் தெரிந்தும் கைது செய்யாமல் காலம் தாழ்த்துவது ஏன்?
சிறுமியின் சார்பாக தி.மு.க. பிரமுகர் யாராவது தலையிட்டால் மட்டும்தான் தகுந்த விசாரணை நடக்குமா? கடந்த நான்காண்டுகளாக காவல்துறையினர் மீதுள்ள நம்பிக்கையை மக்கள் முற்றிலுமாக இழந்துள்ள நிலையில், காவல்துறையினரின் இந்த மெத்தனப் போக்கால் குற்றவாளிகளுக்கும் குளிர்விட்டுப் போய்விடாதா?
மக்களின் குறைகளைத் தேடிச் சென்று தீர்க்கப்போகிறேன் என ஊர் ஊராக விளம்பர நாடகம் நடத்திக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், தனது நேரடிக்கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறையின் நிர்வாகச் சீர்கேட்டை எப்போது தான் சரிசெய்வார்? இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.