தமிழகத்தில் பொதுமக்களும், பெண்களும் உயிர் பயத்துடன் வாழ வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் - டி.டி.வி. தினகரன்
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பத்து வயது சிறுமி அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
தமிழகத்தில் சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பு பெண்களுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடக்காத நாட்களே இல்லை என்ற நிலையில் குற்றச்சம்பவங்களுக்கும், தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது போல நடந்து கொள்ளும் தி.மு.க. அரசால், தற்போது பட்டப்பகலில் மேலும் ஒரு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் கொடுமை அரங்கேறியுள்ளது.
தமிழகத்தில் அரங்கேறும் குற்றச்சம்பவங்களைத் தடுத்து சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க வேண்டிய தி.மு.க. அரசும், அதன் காவல்துறையும் முற்றிலும் செயலிழந்து இருப்பதன் விளைவே, குற்றம் அரங்கேறி ஐந்து நாட்களைக் கடந்தும், பள்ளிச்சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளியைக் கண்டறிய முடியாத சூழலை ஏற்படுத்தியிருப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கொலை, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளும், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் கொடூர மனம் படைத்தவர்களும் சுதந்திரமாக நடமாடும் தமிழகத்தில், நாள்தோறும் பொதுமக்களும், பெண்களும் உயிர் பயத்துடன் பதுங்கி பதுங்கி வாழ வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதற்கு தி.மு.க. அரசே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்.
எனவே, பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நபரைக் கைது செய்து சட்டத்தின் முன்னிறுத்தி உச்சபட்ச தண்டனையைப் பெற்றுத் தருவதோடு, இனியாவது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.