குன்றத்தூரில் நண்பரைக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை: கோர்ட்டு தீர்ப்பு
கொலை தொடர்பாக குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெல்டிங் சங்கரை கைது செய்திருந்தனர்.;
காஞ்சிபுரம்,
குன்றத்தூரில் மதுபோதையில் நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் நாகேசுவரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெல்டிங்சங்கர்(46)அதே குன்றத்தூர் பகுதியில் துரைசாமி முதலியார் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக்(40) இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் மேலும் சில நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு குன்றத்தூர் பகுதியில் மது அருந்தியுள்ளனர். அப்போது கார்த்திக்கிற்கும்,வெல்டிங் சங்கருக்கும் மதுபோதையில் தகராறு ஏற்பட்டத்தில் வெல்டிங் சங்கர் நண்பன் கார்த்திக்கை குப்பையில் கிடந்த டியூப்லைட்டால் தாக்கியதில் அவர் பலத்த காயம் அடைந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெல்டிங் சங்கரை கைது செய்திருந்தனர். இவ்வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கு தொடர்பாக அரசு வழக்குரைஞர் கார்த்திகேயன் 10க்கும் மேற்பட்ட சாட்சியங்களிடம் விசாரணை மேற்கொண்டு வெல்டிங் சங்கர் மீதான குற்றச்சாட்டினை தகுந்த ஆதாரங்களுடன் நிருபித்துள்ளார்.வழக்கினை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி ப.உ.செம்மல் குற்றவாளி வெல்டிங் சங்கருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.