12 நாட்களாக போராடும் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ்
பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் தீர்வு காணப்படவில்லை என்பது கவலைக்குரியதாக உள்ளது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் கடந்த 1-ஆம் தேதி முதல் மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் ராயபுரம், திரு.வி.க நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மை பணிகளை தனியாருக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும், ஏற்கனவே தனியாருக்கு விட்டதை நிறுத்தி மாநகராட்சியே நடத்த வேண்டும், தற்காலிக தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஏற்கனவே தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் (NULM) மூலம் வழங்கப்பட்ட தூய்மைப் பணிகளை அதன் மூலமே தொடர வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்துகின்றனர்.
இதனால் அந்த மண்டலங்களில் பொது சேவைப் பணிகள் பாதிக்கப்பட்டு, பொது சுகாதாரப் பணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை காக்க இரவு, பகலாக போராட்டத்தை தொடர்கின்றனர். 12-க்கும் மேற்பட்ட சுற்றுக்கள் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் தீர்வு காணப்படவில்லை என்பது கவலைக்குரியதாக உள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியுடன் 9 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 25 கிராம ஊராட்சிகள் இணைக்கப்பட்டு, வார்டுகளின் எண்ணிக்கை 155-லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டு, 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. அவ்வாறு விரிவுபடுத்தப்பட்ட போது, திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ளத் தேவைப்படும் கூடுதல் தூய்மைப் பணியாளர்களை, தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் (NULM) கீழ், சுய உதவிக் குழுக்கள் மூலமாக பணியில் ஈடுபடுத்தப்பட்டு, அவர்களுக்கான தினக்கூலி ஊதியம் சுய உதவிக் குழுக்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து ஒவ்வொரு தூய்மைப் பணியாளர்களின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படுகிறது. வெளி முகமைப் பணியாக (Outsourcing) இது செயல்படுத்தப்படுகிறது. 2020-ஆம் ஆண்டிலிருந்து, 10 மண்டலங்களில் முழுமையாகவும், 1 மண்டலத்தில் பகுதியாகவும் பொது - தனியார் பங்களிப்பு முறைமையில் (PPP Mode) திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேற்கூறிய 11 மண்டலங்ளிலும், ஏற்கனவே சுய உதவிக் குழுக்களின் மூலம் பணியாற்றி வந்த 4,994 பணியாளர்கள் உர்பேசர் (Urbaser) மற்றும் ராம்கி (Ramky) ஆகிய தனியார் நிறுவனங்களில் பணியில் ஈர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 4 மண்டலங்களில், மண்டலம் 5, 6_இல் மேற்கூறிய முறையிலான மாற்றத்தின் போது, இம்மண்டங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் ராம்கி எனும் புதிய நிறுவனத்தின் கீழ் இணைய வற்புறுத்தப்பட்டுள்ளது. 16.07.2025 முதல் அந்நிறுவனம் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் மேற்கொண்டு வருவதாகவும், அந்நிறுவனம், ஒப்பந்தப்படி, மொத்தம் 3,809 தூய்மைப் பணியாளர்களை பணியில் நியமிக்க வேண்டும் என்றும், தற்போது வரை 1,770 பணியாளர்களை இந்நிறுவனம் பணியமர்த்தியுள்ள நிலையில் மீதமுள்ள 2,039 பணியிடங்களில் ஏற்கனவே பணியாற்றி வந்த சுய உதவிக் குழுக்களின் தூய்மைப் பணியாளர்களை அமர்த்த வேண்டும் என்றும் மாநகராட்சி கூறுகிறது.
கட்டாயமாக தனியார் நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று மாநகராட்சி வற்புறுத்துவதையடுத்து தான் தூய்மை பணியாளர்கள் 12 நாட்களுக்கு மேலாக இந்த போராட்டத்தை தொடர்கின்றனர். இவர்களின் தொடர் போராட்டத்தால் மண்டலம் 5 மற்றும் 6-ல் வசிக்கும் மற்றும் வந்து செல்லும் சுமார் 20 லட்சம் பொதுமக்களுக்கான பொது சுகாதார சேவைகள் பாதிக்கப்பபட்டுள்ளது. தூய்மைப் பணிகளில் தொய்வு ஏற்பட்டு, குப்பைகள் தேங்கி, மக்களுக்கு பெரும் சுகாதார பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. அதேசமயம் இந்தத் தூய்மை பணியாளர்கள் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக தூய்மை பணியில் ஈடுபட்டு வருபவர்கள். கரோனா பெருநோய் தொற்று காலத்தில் முன்கள பணியாளர்களாக, உயிரை பணயம் வைத்து பணியாற்றியவர்கள். வர்தா புயல், பெருவெள்ளம் போன்ற காலகட்டங்களிலும் விடுப்பு எடுக்காமல் கூட தங்கள் பணிகளை செய்தவர்கள்.
இவர்களில் 90% பேர் பெண்கள், அதிலும் கணவரை இழந்தவர்கள், குடிப்பழக்கத்துக்கு ஆளான கணவர்மார்களால் அன்றாடம் அல்லல் படுபவர்கள். கணவனை இழந்தும், கணவன் இருந்தும் இல்லாமல் இருப்பது போலும் வாழும் இந்த பெண்கள் தனியாளாக குடும்பத்திற்காக உழைத்து வருபவர்கள், குழந்தைகளை வளர்க்கவும் படிக்க வைக்கவும் சிரமப்படுவதுடன் வீட்டில் உள்ள முதியோர்களையும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு இவர்களுக்கு உள்ளது. 10 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபடுவதால் அவர்களின் குழந்தைகளுக்கு உணவு சமைத்துக் கொடுக்க முடியவில்லை, பள்ளிக்கூடங்களுக்கு அனுப்ப முடியவில்லை. குடும்பத்தை கவனிக்க முடியவில்லை. பள்ளியை முடித்துவிட்டு பிள்ளைகள் நேராக போராட்டக் களத்துக்கு வருவதாகவும் கூறப்படுகிறது. இவர்களின் வேலையும் சம்பளமும் நிரந்தரமல்ல என்கிற நிலை ஏற்பட்டால் வீட்டு வாடகை, அன்றாடச் செலவு போன்றவற்றை எதிர்கொள்ள முடியாமல் தவிப்பார்கள். எனவே இவர்களின் (23,000) என்கிற குறைந்தபட்ச சம்பளத்தை உறுதி செய்து, வேலையையும் நிரந்தரம் செய்ய வேண்டும்.
குடிமக்கள் நிம்மதியாகவும், நோய் நொடியின்றி வாழ்வதற்காகவும் தங்களையே அர்ப்பணித்து பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித்தர வேண்டும். மேலும் தனியார் நிறுவனம் மூலம் தூய்மை பணிகளை மேற்கொள்வதை நிறுத்த வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு தனியாக உயர்த்தப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும், அவர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி வரை இலவச கல்வி வழங்க வேண்டும்.
அதுபோலவே தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் போன்றவைகளிலும் தூய்மைப் பணிகள் தனியார் நிறுவனங்களுக்கு வெளி முகமைப் பணி முறையில் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதே பணியை மேற்கொள்ளும் அரசின் நிரந்தர பணியாளர்களுக்கு ஒரு விதமான ஊதியமும், தனியார் நிறுவனங்கள் மற்றும் மகளிர் குழுக்கள் மூலமாக பணியாற்றுபவர்களுக்கு குறைவான ஊதியமும் வழங்கப்படுகிறது. ஒரே வேலையை செய்யும் இவர்களுக்கு ஒரு சிலரில் வேறு ஊதியமும், சரி பாதி பேருக்கு குறைவான ஊதியமும் வழங்கப்படுவது பாரபட்சமான செயலாகும். இரு தரப்பினரும் அவர்களின் பணிகளில் பாரபட்சம் காட்டாத நிலையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது தான் சரியானதாகும். எனவே காலம் தாழ்த்தாமல் உடனடியாக மாநகராட்சி நிர்வாகமும் தமிழ்நாடு அரசும் இதில் அக்கறையுடன் கவனம் செலுத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். அதேபோல தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் வெளி முகமை பணிகளை கைவிட்டு அரசே நியமனம் செய்து சம ஊதியம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.