முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள் என்றைக்கு வரும் தெரியுமா?
21 லட்சத்து 70 ஆயிரத்து 454 பயனாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.;
சென்னை,
முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுதேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் 'முதல்-அமைச்சரின் தாயுமானவர்' என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார்.
இந்த திட்டத்தின் மூலம் 34,809 ரேஷன் கடைகளைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட15 லட்சத்து 81 ஆயிரத்து 364 ரேஷன் கார்டுகளில் உள்ள 20 லட்சத்து 42 ஆயிரத்து 657 பயனாளர்களும், 91,969 ரேஷன் கார்டுகளில் உள்ள 1 லட்சத்து 27 ஆயிரத்து 797 மாற்றுத்திறனாளிகளும் என மொத்தம் 16 லட்சத்து 73 ஆயிரத்து 333 ரேஷன் கார்டுகளில் உள்ள 21 லட்சத்து 70 ஆயிரத்து 454 பயனாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களின் விவரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையிடம் இருந்து பெறப்பட்டு, கள அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம், மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் ரேஷன் பொருட்களைப் பாதுகாப்பாகத் தகுதியுள்ள பயனாளர்களின் வீட்டிற்கே சென்று ரேஷன் விற்பனையாளர்கள் விநியோகிப்பார்கள்.
இதுகுறித்து, ரேஷன் கடை விற்பனையாளர் ஒருவரிடம் கேட்டபோது, 'எங்களையே வாகனத்தை ஏற்பாடு செய்ய கூறியுள்ளனர். அதற்கான வாடகைத் தொகையை தருவதாகவும் தெரிவித்துள்ளனர்' என்றார்.
முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை செயல்படுத்துவதற்காக அரசுக்கு ரூ.35 கோடியே 92 லட்சம் ஆண்டுக்கு கூடுதலாக செலவாகும்