தமிழக-கேரள எல்லையில் மாவோயிஸ்டுகள் நடமாட்டமா? தீவிர வாகன சோதனை
அந்நியர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீசார், வனத்துறையினர் தெரிவிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது;
காரமடை,
நாடு முழுவதும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவை காரமடை அருகே தமிழக-கேரள எல்லையில் உள்ள கோபனாரியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், அத்திக்கடவு, பில்லூர், மேல்பாவி, குண்டூர், ஆலங்கண்டி, ஆலங்கட்டிபுதூர், காலன்புதூர், செங்குட்டை, குட்டை புதூர், பட்டி சாலை உள்ளிட்ட பல்வேறு பழங்குடியின கிராமங்களில் மாவோயிஸ்டுகள், ஐ.எஸ். ஆதரவாளர்கள் நடமாட்டம் உள்ளதா என போலீசார் மற்றும் வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அந்நியர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீசார், வனத்துறையினர் தெரிவிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர கோபனாரி சோதனை சாவடியில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. சுதந்திர தின பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்படுகிறது என்று தெரிவித்தனர்.