சுதந்திர தின தொடர் விடுமுறை: ஆம்னி பஸ்களில் டிக்கெட் விலை இரு மடங்கு உயர்வு
சுதந்திர தின தொடர் விடுமுறையையொட்டி ஆம்னி பஸ்களில் டிக்கெட் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது.;
சென்னை,
சுதந்திர தினத்தையொட்டி, வருகிற வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர் விடுமுறை வருகிறது. மேலும் பெருமபாலான ஊர்களில் ஆடி திருவிழா நடைபெறுவதால், பலரும் சொந்த ஊருக்குச் செல்ல ஆயத்தமாக வருகிறார்கள். இதை பயன்படுத்தி இன்று (வியாழக்கிழமை) சென்னையில் இருந்து புறப்படும் ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் இருமடங்கு வரை அதிகரித்து உள்ளது.
அதாவது, சாதாரண நாட்களில் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ரூ.650 முதல் ரூ.1500 வரை கட்டணம் இருக்கும் ஆம்னி பஸ்களில், தொடர் விடுமுறை நாட்களில் ரூ.1,500-க்கு குறைந்து டிக்கெட் கட்டணம் இல்லை. சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல ரூ.1,300 வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், நெல்லையில் இருந்து சென்னைக்கு வர ரூ.1,500 முதல் 2,000 வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிலும் சில பஸ்களில் இருமடங்கை தாண்டியே டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அந்த பஸ்களிலும் இருக்கைகள் ஓரளவுக்கு நிரம்பி, குறைந்த அளவிலேயே காலி இடங்கள் இருக்கின்றன. எவ்வளவு கட்டணம் என்றாலும், எப்படியாவது ஊருக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கில் ஆம்னி பஸ்களில் பயணிப்பவர்கள் பயணிக்கத்தான் செய்கிறார்கள்.
ஒவ்வொரு முறையும் இதுபோன்ற தொடர் விடுமுறை, பண்டிகை நாட்களில் கட்டணம் உயர்வு குறித்து பேசுவதும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு சொல்வதும் தொடர் கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.