ஏழை குழந்தைகளை அவமதித்த கல்வித்துறை உயரதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி

மாணவர்களையும், பெற்றோரையும் இழிவு படுத்தும் வகையில் கல்வி அதிகாரி பேசியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்;

Update:2025-08-13 16:03 IST

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை தமிழக அரசு இன்னும் செலுத்தாததால் அவர்களின் கல்வி பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்தக் குழந்தைகளையும், அவர்களின் பெற்றோரையும் இழிவுபடுத்தும் வகையில் பள்ளிக் கல்வித்துறையின் உயரதிகாரி ஒருவர் பேசியதாக நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மாணவர்களையும், பெற்றோரையும் இழிவு படுத்தும் வகையில் கல்வி அதிகாரி பேசியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

2009-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி, தனியாருக்கு சொந்தமான பள்ளிகளிலும் மழலையர் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அனைத்து வகுப்புகளிலும் 25% இடங்கள் சமூகநிலையிலும், பொருளாதாரத்திலும் பின்தங்கிய குழந்தைகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. அச்சட்டத்தின்படி நடப்பாண்டில் இரண்டாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கடந்த இரு ஆண்டுகளாக செலுத்தப்பட வேண்டிய கட்டணம் ரூ.600 கோடி இன்று வரை செலுத்தப்படவில்லை. அரசுத் தரப்பில் கல்விக் கட்டணம் செலுத்தப்படாத நிலையில், சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோரே அந்தக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று தனியார் பள்ளிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இதை சுட்டிக்காட்டி கடந்த ஜூலை 19-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்த நான், அரசின் அலட்சியத்தால் தனியார் பள்ளிகளில் பயிலும் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரின் கல்வி பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை உடனடியாக செலுத்துவதுடன், ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையையும் உடனடியாக தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். இந்த சிக்கல் தொடர்பாக தினத்தந்தி நாளிதழிலும் கடந்த ஜூலை 23-ஆம் தேதி சிறப்புச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந்த சிக்கல் தொடர்பாகவும், அதனால் பெற்றோர்களிடையே ஏற்பட்டிருக்கும் குமுறல் தொடர்பாகவும் பள்ளிக்கல்வித் துறையில் அமைச்சருக்கு அடுத்த நிலையில் உள்ள உயர் அதிகாரியிடம் தினத்தந்தி செய்தியாளர் கேட்ட போது.‘‘25 சதவீத இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் நாங்களாச் சேரச் சொன்னோம்? அரசுப் பள்ளிகளில் எவ்வளவோ காலியிடங்கள் இருக்கின்றன. இப்போதும் கூட சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியரின் பெற்றோர் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்ந்த இடத்தை ரத்து செய்து விட்டு, அரசு பள்ளிகளில் சேர்க்கச் சொல்லுங்கள். மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகளை நாங்கள் செய்து கொடுக்கிறோம்” என்று அலட்சியமாக பதில் கூறியதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

இவ்வாறு அதிகாரத் திமிருடன் பதில் கூறிய பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரி யார்? என்பதை சம்பந்தபட்ட நாளிதழ் வெளியிடவில்லை. அந்த அதிகாரி யாராக இருந்தாலும் அவரது இந்தத் திமிரான நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. குழந்தைகளையும், பெற்றோரையும் இழிவுபடுத்தும் அவர், பள்ளிக்கல்வித்துறையின் உயர் பதவியில் ஒரு நிமிடம் கூட நீடிப்பதற்கு தகுதியற்றவர் என்பதைத் தான் இந்த பதில் காட்டுகிறது.

அடித்தட்டு மக்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தான் கல்வி பெறும் உரிமைச் சட்டம் 2009-ஆம் ஆண்டில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை 2006&-11 ஆம் ஆண்டு காலத்தில் கலைஞர் தலைமையிலான அரசு தான் தமிழகத்தில் செயல்படுத்தியது. இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் தனியார் பள்ளிகளில் 25% மாணவர்களை சேர்ப்பதற்கான அறிவிக்கையை தமிழக அரசு தான் வெளியிடும். அதன் பொருள் விருப்பமுள்ள மாணவர்கள் தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் சேரலாம் என்பது தான். அவ்வாறு இருக்கும் போது தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் சேரும்படி ஏழை மாணவர்களிடம் நாங்களா சொன்னோம்? என்று கல்வித்துறை உயரதிகாரி கேட்பது அரசின் கொள்கைகளுக்கு எதிரானது என்பது மட்டுமின்றி, சமூகநீதியை சிதைக்கும் செயலும் ஆகும்.

ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டிற்கும், நடப்பாண்டின் முதல் காலாண்டிற்கும் வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்பது உண்மை தான். இரு அரசுகளுக்கும் இடையே நிலவும் கொள்கை அடிப்படையிலான மோதல்கள் தான் இதற்குக் காரணம் ஆகும். இந்த சிக்கல் உடனடியாகத் தீர வாய்ப்பில்லை எனும் நிலையில், மாற்று ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை தமிழக அரசு அதன் சொந்த நிதியிலிருந்து செலுத்தி விட்டு, மத்திய அரசிடமிருந்து வரும் போது எடுத்துக் கொள்ளலாம். அதையெல்லாம் செய்யாமல் நடப்பாண்டில் மாணவர் சேர்க்கையையே நடத்தாமல் இருப்பதும், மற்ற வகுப்புகளில் பயிலும் 8 லட்சம் பேரின் கல்வி பாதிக்கப்படுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதையும் ஏற்க முடியாது; மன்னிக்கவும் முடியாது.

இவை அனைத்திற்கும் மேலாக மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் வாங்கும் ஓர் உயரதிகாரி, இப்படி பொறுப்பற்ற வகையில் பேசுவதை அரசு சகித்துக் கொண்டிருக்க முடியாது. கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25% இடங்களில் பயிலும் மாணவர்களுக்காக செலுத்தப்படும் கட்டணம் யாருடைய அப்பன் வீட்டுச் சொத்தும் அல்ல. அது மக்களின் வரிப்பணம். ஏழைக் குழந்தைகளுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டியது அரசின் கடமை. அதை செய்யாமல் ஏழைக் குழந்தைகளை இழிவுபடுத்தக்கூடாது.

சமூகநீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிரான பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரியின் இந்த நிலைப்பாட்டை தமிழக அரசு ஏற்றுக்கொள்கிறதா? என்பதை ஆட்சியாளர்கள் தெளிவுபடுத்த வேண்டும். தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் சேர்ந்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஏழைக் குழந்தைகளை இழிவுபடுத்தும் பள்ளிக்கல்வித்துறையின் உயரதிகாரி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

Tags:    

மேலும் செய்திகள்