ஓசூர் அருகே கார்கள் மீது லாரி கவிழ்ந்து கோர விபத்து
திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி அருகில் உள்ள இரண்டு கார்கள் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.;
கிருஷ்ணகிரி,
மராட்டிய மாநிலத்தில் இருந்து அந்தியூரை சேர்ந்த விவேகானந்தர் என்பவர் வெங்காய லோடை ஒரு லாரியில் ஏற்றிக்கொண்டு பெங்களூரு - சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தார். இந்த நிலையில் ஓசூர் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது இரண்டு கார்கள் லாரி அருகே சென்றுகொண்டிருந்த நிலையில், அதன் மீது லாரி கவிழ்ந்து கார்கள் அப்பளம் போல் நொறுங்கின.
காரில் இருந்தவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்த விபத்து காரணமாக அந்த சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனை தொடர்ந்து விபத்தில் சிக்கிய வாகனங்கள் கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டன.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.