கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை
பாதுகாப்பு கருதி இன்று சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
கோவை,
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. கோவையின் பிரதான சுற்றுலாத்தலமான இந்த நீர்வீழ்ச்சிக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்த நீர்வீழ்ச்சியில் வாரந்தோறும் திங்கட்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி இன்று சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவியில் நீர்வரத்து சீராகும் வரை கோவை குற்றாலம் அருவி மூடப்படும் என்றும், மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் வனத்துறை அறிவித்துள்ளது.