காமராஜர் குறித்து சர்ச்சை பேச்சு: தி.மு.க. - காங்கிரஸ் இடையே மோதல்
கருணாநிதியின் கைகளை பிடித்துக் கொண்டு நாட்டையும் ஜனநாயகத்தையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் காமராஜர் கூறியதாக திருச்சி சிவா தெரிவித்தார்.;
சென்னை,
நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க. - காங்கிரஸ் தொடர்ந்து கூட்டணி அமைத்து வருகின்றன. பா.ஜ.க. மாநில தலைவராக அண்ணாமலை இருந்தபோது, அவர் தெரிவித்த சர்ச்சை கருத்தால் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உடைந்தது.
அதுபோன்ற ஒரு சம்பவம் தற்போது தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியிலும் அரங்கேறி இருக்கிறது. அதாவது, தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான திருச்சி சிவா நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, "மின்சார தட்டுப்பாடு என்று தமிழ்நாடு முழுவதும் காமராஜர் கண்டனம் கூட்டம் நடத்தினார். காமராஜருக்கு ஏ.சி. இல்லையென்றால் உடம்பில் அலர்ஜி வந்துவிடும். அதற்காக அவர் தங்குகிற அனைத்து பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி செய்ய கருணாநிதி உத்தரவிட்டார். கருணாநிதியின் பெருந்தன்மையை பார்த்து நெகிழ்ந்து போன காமராஜர், உயிர் போவதற்கு முன்பு, அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் கைகளை பிடித்துக் கொண்டு நாட்டையும் ஜனநாயகத்தையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்" என்று கூறினார்.
திருச்சி சிவாவின் இந்த சர்ச்சை பேச்சு காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கோபமடையச் செய்தது. அதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பேசும்போது,"தி.மு.க. பரப்பிய கட்டுக்கதைகளால் தேர்தலில் காமராஜர் வீழ்த்தப்பட்டார் என்பது வரலாறு. கட்டுக்கதைகளுக்கு சரியான பதிலடி தராமல் இருந்தால் காமராஜர் ஆன்மா நம்மை மன்னிக்காது. காமராஜர் பெயரால் தமிழக அரசியல் களத்தில் காங்கிரஸ் இன்றும் நிற்கிறது. ஏ.சி. அறை இல்லாமல் காமராஜர் உறங்கமாட்டார் என திருச்சி சிவா சொல்வது உண்மைக்குப் புறம்பானது. அரசினர் விடுதியில் தங்கி, வெயிலின்போது மரத்தடியில் தூங்கிய முதல்-அமைச்சர் காமராஜர்" என்று பதிலடி கொடுத்தார்.
இதனால், தி.மு.க. - காங்கிரஸ் இடையே மோதல் போக்கு உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தேர்தல் கூட்டணியில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், பிரச்சினையை தணிக்கும் வகையில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "தமிழ்நாட்டில் சரித்திர நிகழ்வுகளை பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். அதில் கூறப்பட்ட இரு தலைவர்களும் இப்போது இல்லை. எனவே, மக்கள் பிரச்சினைகளை பற்றி பேசுவோம்" என்று கூறியுள்ளார்.