'ஆடிப்பெருக்கு விழாவை பாதுகாப்புடன் கொண்டாடுங்கள்' - ராமதாஸ் வேண்டுகோள்

ஆடிப்பெருக்கு பெருவிழாவை கொண்டாடி மகிழும் அனைவருக்கும் வாழ்த்துகள் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.;

Update:2025-08-02 22:05 IST

சென்னை,

ஆடிப்பெருக்கு விழாவை பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"ஆடி (மாதம்), காவிரி இவ்விரண்டுமே ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த உறவுப்பாலங்கள். ஆடிப்பெருக்கில் காவிரிப்படுகையில் வாழும் மக்கள் திரளாய் ஒன்றிணைந்து காவிரி ஓட்டத்தில் மலர்தூவியும் கரையோரத்தில் பொங்கல் வைத்தும் வேளாண்மை செழிக்கவும் குலம் தழைக்கவும் பன்னெடுங்காலமாகவே வழிபாடு செய்வது வழக்கம். நீத்தார்களான முன்னோர்களை நினைவு கூர்ந்தும் இந்நாளில் திரண்டுவரும் தமிழ்ச்சொந்தங்கள் ஏராளம்.

ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாளைத்தான் ஆடி பதினெட்டு என்றும் பதினெட்டாம் பெருக்கு என்றும், கொண்டாடுகிறோம். விவசாய பெருங்குடிகள் அன்னையாய் போற்றிடும் 'காவிரி' க்கு நன்றி தெரிவிக்கும் நன்னாளும் இதுவே ஆகும்.

"ஆடிப்பட்டம் தேடி விதை" என்பர். தென்மேற்குப் பருவத்தில் பெய்யும் மழையால் ஆறுகளனைத்தும் நிரம்பி வழியும் கண்கொள்ளாக் காட்சிதனையே ஆற்றுப்பெருக்கு எனவும் போற்றி மகிழ்கிறோம். இப்போதுதான் நெல் விதைப்போம், கரும்பு விதைப்போம், தைப்பொங்கலுக்கு முன்பாக அறுபடை செய்வோம். மகிழ்ந்திருப்போம்.

ஆடிப்பெருக்கு நாளை வரவேற்கக் காத்திருக்கும் புதுமணத் தம்பதியரை இந்நாளில் வாழ்த்துகிறேன். வாழ்வில் நலம் பெருகட்டும், சுகமே சூழட்டும். கணவன் கைகளால் புதுமஞ்சள் தாலி அணிந்து மகிழும் பெண்பிள்ளைகளின் கனவுகள் யாவும் மெய்ப்படட்டும். மணம் முடிக்காத பெண் பிள்ளைகளுக்கும் இந்நாளில் நல்வாழ்வு அமையட்டும். திருச்சி - திருவரங்கம் அம்மா படித்துறையில் காவிரிக்கும் சீர்கொடுக்கும் நிகழ்வாகட்டும்; தர்மபுரி மாவட்டம் மொத்தமும் உள்ள நீர்நிலைப் பகுதிகளில் வழிபாடு செய்வதாகட்டும்;

நாமக்கல் - சேலம் மாநகர மக்கள் அனைவரும் கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் நீராடி முடித்து அறப்பளீஸ்வரர் வழிபாடு செய்வதாகட்டும், அனைத்தையும் சிறப்பாக செய்யுங்கள். நீர்நிலைப் பகுதிகளில் பாதுகாப்பாகவும், எச்சரிக்கை உணர்வோடும் இருங்கள்.

காவிரியில் தற்போது ஓட்டம் அதிகம். நீர் பாய்ந்தோடி மகிழ்விக்கும்; விவசாயம் சீர்பெறும்; நமக்கெல்லாம் அதில் ஆனந்தமே. பாதுகாப்பும் மிக முக்கியம். தற்காத்துக் கொள்ளல் மிக மிக முக்கியம். பெரியவர்கள், சிறார்களின் கைகளை விட்டு விட்டு ஒருபோதும் நகராமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் கனவுகள் நிறைவேற நானும் வாழ்த்துகிறேன்.

காவிரியிலிருந்து பெருக்கெடுத்தோடும் நீர், ஒவ்வொரு பருவகாலத்தின் போதும், குறைந்தது 30 டிஎம்சி அளவேனும், வீணே கடலில் போய்க் கலப்பதை தடுத்து, தேக்கி வைத்து; விவசாயத்துக்கும்; இதர தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளும் நாளே; தமிழ்நாட்டின் சிறந்தநாள்.

தென்பெண்ணை, பாலாறு, தாமிரபரணி ஆறுகளும் இப்படித்தான் பெருமளவு நீரை கடலில் கலக்கும் சூழலில் வைத்திருக்கிறோம். உபரி நீரை சேகரித்து வைத்தால் விவசாயத்திலும், விளைச்சலிலும், லாபத்திலும், விவசாயப் பெருங்குடிகள் தலை நிமிரும். "ஒரு சொட்டு நீரைகூட கடலில் போய் வீணாய் கலக்க விட்டிடக்கூடாது" என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் உறுதியான வலியுறுத்தலை மீண்டும் மீண்டும் தமிழ்நாடு அரசுக்கும், மத்திய அரசுக்கும் சுட்டிக் காட்டுகிறோம். கோரிக்கை விடுக்கிறோம்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்