தீரன் சின்னமலை நினைவு தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
தீரன் சின்னமலை, ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகில் மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் பிறந்தார்.;
சென்னை,
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினம் ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் அனுசரிக்கப்படுகிறது.
அந்தவகையில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 220-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி சென்னை, கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை சிலையின்கீழ் அலங்கரித்து வைக்கப்படவுள்ள அவரது திருவுருவ படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
தீரன் சின்னமலை, ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகில் மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் பிறந்தார். இரத்தினசாமி கவுண்டர்- பெரியாத்தா ஆகியோரின் மகனாகப் பிறந்த இவரது இயற்பெயர் தீர்த்தகிரி. தீரன் சின்னமலை அவர்கள் இளம் வயதிலேயே போர்க்கலைகளான வாள்பயிற்சி, வில் பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம், தடிவரிசை போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்து சிறந்த இளம் வீரராகத் திகழ்ந்தார்.
பல்வேறு துணிச்சலான போர்க்கலைகளைக் கற்றுத் தேர்ந்து, போர் யுக்திகளைத் தனது படைகளுக்குக் கற்றுத்தந்தார். இந்திய விடுதலைப் போரில் பங்கேற்று ஆங்கிலேயர்களுக்குச் சவால் விட்டு அவர்களின் கிழக்கிந்தியக் கம்பெனியை அடியோடு ஒழிக்க நடவடிக்கை மேற்கொண்டார்.
கோவை, ஈரோடு சேர்ந்த கொங்குப் பகுதி அந்நாளில் மைசூர் சமஸ்தானத்தின் உடையார் மரபினர் ஆட்சியின் கீழ் இருந்தது. அந்த கொங்குப் பகுதியில் வரி வசூல் செய்து மைசூருக்கு எடுத்துச் செல்லப்பட்ட பணத்தை எங்கள் பணம் ஏன் மைசூருக்குச் செல்ல வேண்டும் என தடுத்து, அப்பணத்தைப் பறித்து ஏழைகளுக்கு உதவினார். அதனால் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே ஒரு சின்னமலை என்று புகழ் பெற்றார் தீரன் சின்னமலை.