பீகாரை சேர்ந்த 6.50 லட்சம் பேரை தமிழக வாக்காளர்களாக சேர்ப்பது ஆபத்தானது; ப.சிதம்பரம்
அதிகார துஷ்பிரயோகத்தை எதிர்த்து அரசியல் ரீதியிலும், சட்டரீதியிலும் போராட வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறினார்;
சென்னை,
பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதில், பீகாரில் இருந்து வெளி மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்துள்ள 36 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
நீக்கப்பட்ட பீகாரிகள், தற்போது வேலை நிமித்தமாக புலம்பெயர்ந்துள்ள தமிழகம், ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் வாக்குரிமை வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் வசித்து வரும் புலம்பெயர்ந்த பீகாரிகள் 6.50 லட்சம் பேருக்கு தமிழகத்தில் வாக்குரிமை வழங்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது தமிழக அரசியல் சூழ்நிலையில் பெரும் தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
இந்நிலையில், பீகாரை சேர்ந்த 6.50 லட்சம் பேரை தமிழக வாக்காளர்களாக சேர்ப்பது ஆபத்தானது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
பீகாரில் நடைபெற்றுவரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி மேலும், மேலும் ஆர்வத்தை தூண்டி வருகிறது. பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கும் உரிமையை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளபோது,
பீகாரை சேர்ந்த 6.50 லட்சம் பேரை தமிழக வாக்காளர்களாக சேர்க்கப்பட உள்ளதாக வெளியான தகவல் ஆபத்தானது மட்டுமின்றி சட்டவிரோதமானது.
பீகாரை சேர்ந்தவர்கள் நிரந்தரமாக வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் என்று அழைப்பது புலம்பெயர் தொழிலாளர்களை அவமதிப்பதாகும். மேலும், இது தமிழக வாக்காளர்கள் அவர்களின் அரசை தேர்ந்தெடுக்கும் உரிமையில் தலையிடுவதாகும்.
மாநில தேர்தலின்போது புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊரான பீகாருக்கு ஏன் செல்லக்கூடாது? வழக்கமாக அவ்வாறுதானே நடைமுறை உள்ளது.
சாத் பூஜை விழாவின்போது பீகாரை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவில்லையா?
வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் நபர் நிலையான மற்றும் நிரந்தர சட்டப்பூர்வ வீடு கொண்டிருக்க வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்கள் பீகார் மற்றும் பிற மாநிலங்களில் நிலையான, நிரந்த வீடுகளை கொண்டுள்ளனர். அவர்கள் எப்படி தமிழக வாக்காளர்களாக மாற முடியும்?
புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பத்தினர் பீகாரில் நிரந்தரமான வீடு வைத்துக்கொண்டு அங்கு வாழ்ந்துகொண்டிருக்கும்போது புலம்பெயர் தொழிலாளர் மட்டும் எப்படி நிரந்தரமாக தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்தவர் என்று கருதமுடியும். இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதன் அதிகாரங்களை தவறாக பயன்படுத்தி மாநிலங்களின் தேர்தல் தன்மை மற்றும் முறைகளை மாற்ற முயற்சிக்கிறது. இந்த அதிகார துஷ்பிரயோகத்தை எதிர்த்து அரசியல் ரீதியிலும், சட்டரீதியிலும் போராட வேண்டும்
இவ்வாறு தெரிவித்துள்ளார்.