ஆடிப்பெருக்கு: பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு

பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வருகை தந்த ஏராளமான பெண்கள், கோவிலுக்கு வெளியே தீபம் ஏற்றியும் வணங்கினார்கள்.;

Update:2025-08-03 13:44 IST

சத்தியமங்கலத்தை அடுத்து பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை, பண்டிகை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள், அமாவாசை, பௌர்ணமி மற்றும் முகூர்த்த நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் இருக்கும். தமிழ்நாடு மட்டுமல்லாமல் கர்நாடகாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை வணங்கி செல்வார்கள்.

இந்நிலையில், இன்று ஆடி 18, ஆடிப்பெருக்கை முன்னிட்டு வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. அதிகாலை 5 மணி முதலே பக்தர்கள் குவியத் தொடங்கினர். காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டதும் பக்தர்கள் வரிசையாக சென்று அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலுக்கு வெளியே உள்ள குண்டத்தில் இருந்த சாம்பலை எடுத்து திருநீறாக நெற்றியில் வைத்து கொண்டனர். அத்துடன், ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக கொண்டு வந்திருந்த மிளகு மற்றும் உப்பு கலவையை கோவிலின் முன்பாக தூவி கற்பூரம் ஏற்றி வணங்கினர். ஏராளமான பெண்கள் தீபம் ஏற்றியும் அம்மனை வணங்கினார்கள்.

பக்தர்களின் வசதிக்காக சத்தியமங்கலத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சத்தியமங்கலம் போலீஸ் டிஎஸ்பி முத்தரசு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்