திருத்தணி முருகன் கோவிலில் காவடிகளுடன் குவிந்த பக்தர்கள்
திருத்தணி முருகன் கோவிலில் இன்று பொது தரிசன வழியில் பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர்.;
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடாக திகழ்வது திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து செல்வது வழக்கம். இக்கோவிலுக்கு விடுமுறை நாட்களில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும்.
இந்நிலையில் இன்று ஆடிப்பெருக்கு மற்றும் ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் ஆந்திர, கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்களால் நிரம்பி வழிந்தது.
காலை முதலே மலைக்கோவிலுக்கு வெளியூர்களிருந்து வந்த சுற்றுலா பஸ்கள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் வந்ததால் மலைக்கோவிலில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொது தரிசன வழியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர்.
இன்று அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யப்பட்டு, தங்க வேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.