காவிரி ஆற்றில் மோட்ச தீபம்.. ஏராளமான பக்தர்கள் வழிபாடு
பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் மோட்ச தீபத்தை தரிசனம் செய்தனர்.;
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் காசி விஸ்வநாதர் கோவில் சார்பில் காவிரி ஆற்றில் ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு மோட்ச தீபம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி காசி விஸ்வநாதர் கோவிலில் மோட்ச தீபத்திற்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் மோட்ச தீபத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று, பரிசல் மூலம் காவிரி ஆற்றின் மத்திய பகுதிக்கு சென்று மோட்ச தீபம் விடப்பட்டது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து மோட்ச தீபத்தை தரிசனம் செய்தனர்.
கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் காவிரி கரை மற்றும் நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் பைபாஸ் சாலையில் உள்ள இரட்டை காவிரி பாலத்தின் புதிய பாலத்தில் இருந்தும் பக்தர்கள் மோட்ச தீபத்தை வழிபட்டனர்.
பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னெச்சரிக்கையக காவிரி கரையேரத்தில் ஆம்புலன்ஸ் வாகனம், நாமக்கல் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
விவசாயம் செழிக்கவும், நாட்டு மக்கள் நலம் பெறவும், நாடு வளம் பெறவும், காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் வகையில் பல நூற்றாண்டாக மோட்ச தீபம் ஆற்றில் விடும் வைபவம் நடைபெற்று வருகிறது.