ஆடிப்பெருக்கு.. மேட்டுப்பாளையத்தில் கன்னிமார் பூஜை செய்து முன்னோர்களை வழிபட்ட மக்கள்

ஆடிப்பெருக்கை முன்னிட்டு மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் நடை காலை 6.00 மணிக்கு திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.;

Update:2025-08-03 17:17 IST

ஆடி பெருக்கை முன்னிட்டு மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோவில் பவானி ஆற்றின் கரையோர பகுதியில் காலை முதலே பொதுமக்கள் குவிந்தனர். பொதுமக்கள் பவானி ஆற்றில் நீராடிய பின்னர் கன்னிமார் பூஜை செய்து முன்னோர்களை வழிபட்டனர். இதற்காக படித்துறையில் 7 கற்களை எடுத்து வைத்து அவற்றுக்கு விபூதி, குங்குமம், சந்தனமிட்டு, படையலிட்டு  குடும்பத்துடன் தங்களது முன்னோர்களை வழிபட்டனர்.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு பவானி ஆற்றின் கரையோர பகுதியில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஆடி குண்டம் திருவிழாவில் 13 ஆம் நாள் மற்றும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு வனபத்ரகாளியம்மன் கோவில் நடை காலை 6.00 மணிக்கு திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை தீபாராதனை நடைபெற்றது. பவானி ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள முத்தமிழ் விநாயகர் சன்னதி பீமன் பகாசுரன் சந்நிதி மற்றும் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் திரண்டு காணப்பட்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கொடி மரத்தின் முன்பு பெண்கள் எலுமிச்சை தீபம் ஏற்றி அம்மனை மனதில் நினைத்து பயபக்தியுடன் வழிபட்டனர்.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

ஆடி குண்டம் திருவிழாவின் 14வது நாள் நிகழ்வாக, நாளை காலை 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜையும், காலை 10 மணிக்கு திருக்கோவில் சார்பாக 108 திருவிளக்கு பூஜையும், பகல் 12 மணி மற்றும் மாலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜையும் நடைபெறும்.

விழாவின் 15வது நாளில் (5.8.2025) காலை 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை தீபாராதனை, மறுபூஜையுடன் ஆடிகுண்டம் திருவிழா நிறைவுபெறும்.

Tags:    

மேலும் செய்திகள்