தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
பக்தர்களின் தலையில் பூசாரி தேங்காயை உடைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்.;
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம், கம்பிளியம்பட்டியை அடுத்த கே.ஆண்டியப்பட்டியில் மகாலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா நேற்று மாலை விநாயகருக்கு பொங்கல் வைக்கும் நிகழ்வுடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக, பக்தர்களின் தலையில் சக்தி தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவில் முன்புள்ள கம்பத்தில் நெய் தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் நேர்த்திக்கடன் செலுத்த வந்த ஆண்கள், பெண்கள் வரிசையாக கோவில் முன்பு அமர வைக்கப்பட்டனர். இதனை அடுத்து கோவில் பூசாரி கையில் தீப்பந்தத்துடன் 'கோவிந்தா கோவிந்தா' என முழக்கமிட்டபடி, ஒவ்வொருவரின் தலையிலும் தேங்காயை உடைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்.
விழாவில் கே.ஆண்டியப்பட்டி, கம்பிளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக கலந்துகொண்டு வழிபட்டனர்.