முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம்: தூத்துக்குடியில் பள்ளி மாணவிகள் உறுதிமொழி ஏற்பு

முதியோர்களின் உரிமைகனை பராமரிப்பதற்காகவே பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டங்கள் கொண்டுவரப்பட்டது என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் அரசு செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் தெரிவித்தார்.;

Update:2025-08-03 15:00 IST

தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று (1.8.2025) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசு செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் பள்ளி மாணவிகள் அனைவரும் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசு செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் பேசியதாவது:

தமிழ்நாடு முதல்-அமைச்சர் பெரியவர்கள் நலனில் அக்கறைக் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். கிட்டத்தட்ட 15 லட்சம் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,200 முதியோர் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. முதியோர்கள் பொருளீட்டுவதற்கான வசதிக்காகவும், அவர்களின் வாழ்வாதார தேவைக்காகவும் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. 648 அரசு மற்றும் தனியார் அமைப்புகள் மூலம் ஆதரவற்றோர்களுக்கான முதியோர் இல்லங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் முதியோர்களின் உரிமைகளை பராமரிப்பதற்காகவே பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டங்கள் கொண்டுவரப்பட்டது.

இதன்மூலம் மாவட்ட கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் ஆகியோர்கள் வாயிலாக புகார் அளிக்கும்பட்சத்தில் அவர்களின் குறைகளை கேட்டறிந்து சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளலாம். இச்சட்டத்தின் வாயிலாக சுமார் 2,000 பேர் பயனடைந்துள்ளனர். எனவே இச்சட்டம் முதியோர்களுக்கு பயனுள்ளதாக அமையும். நாம் அனைவரும் பெற்றோர்களைக் கௌரவமாகவும், நல்ல ஒரு மனிதர்களாகவும் நடத்துகின்ற பொழுது வாழ்க்கையில் எல்லாம் நன்றாக நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசு செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன், முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கையெழுத்து இயக்கத்தை கையெழுத்திட்டு தொடங்கி வைத்து, செல்பி பாயிண்டில் மாணவிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டு, முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் குறித்து நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் உரிமைத்துறை இயக்குநர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் பானோத் மிருகேந்தர் லால், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைஇயக்குநர் (சிறப்பு திட்டம்) உமாதேவி, தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் பிரபு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா, தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவரும், கவுன்சிலருமான கலைச்செல்வி, சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் விபாஸ்ரீ மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்