சேலம் அருகே தீ விபத்து - 15க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலி
சேலம் அருகே தீயில் கருகியதில் 15 நாட்டுக்கோழி, 2 ஆடுகள் மற்றும் நாய் ஆகியவை பரிதாபமாக உயிரிழந்தன.;
சேலம்,
சேலம் அருகே கருப்பூர் மூங்கப்பாடியை பகுதியை சேர்ந்தவர் யோகேஷ் (வயது 45). விவசாயியான இவர் வீட்டின் அருகே கோழிப்பண்ணை வைத்துள்ளார். இங்கு 20 நாட்டுக்கோழிகள், 2 ஆடுகள் மற்றும் நாய் ஒன்று வளர்த்து வந்தார்.
நேற்று அதிகாலை 4 மணி அளவில் கோழிப்பண்ணை அமைக்கப்பட்டுள்ள குடிசையில் இருந்து கரும்புகை வந்தது. பின்னர் சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிந்தது. இதனிடையே அருகில் இருந்த வீட்டில் தூங்கி கொண்டிருந்த யோகேஷ், கோழிப்பண்ணையில் தீப்பற்றி எரிந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஓமலூர் தீயணைப்பு நிலையத்துக்கு உடனே தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் நிலைய அலுவலர் தர்மலிங்கம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் தீயில் கருகியதில் 15 நாட்டுக்கோழிகள், 2 ஆடுகள், ஒரு நாய் ஆகியவை செத்தன.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கருப்பூர் போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். அதைத்தொடர்ந்து யோகேஷ் கொடுத்த புகாரின் பேரில், கோழிப் பண்ணைக்கு யாராவது மர்ம நபர்கள் தீ வைத்தார்களா? அல்லது எப்படி தீ விபத்து நடந்தது? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.