மோடி அரசின் மிரட்டல்கள், வழக்குகளை காங்கிரஸ் முறியடிக்கும் - செல்வப்பெருந்தகை உறுதி

தொடர்ந்து அவதூறுகளை முன்னெடுத்து வரும் பா.ஜ.க.வினருக்கு கண்டனங்களை தெரிவிப்பதாக செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.;

Update:2025-08-05 16:39 IST

சென்னை,

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"இந்திய ஒற்றுமை பயணம்" மேற்கொண்ட மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2022, டிசம்பர் 16 அன்று பேசும்போது, லடாக் எல்லையில் இந்தியாவின் 2,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை சீனா ஆக்கிரமித்து விட்டதாக கூறி இருந்தார். இதையடுத்து, ராகுல் காந்திக்கு எதிராக எல்லை சாலைகள் அமைப்பின் முன்னாள் இயக்குநர் உதய் சங்கர் ஸ்ரீவத்சவா, லக்னோவில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கான நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த அவதூறு வழக்கை எதிர்த்து லக்னோ ஐகோர்ட்டில் ராகுல் காந்தி தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடியான நிலையில், சுப்ரீம்கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் தீபங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மசியா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, இந்தியாவின் 2 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை சீனா ஆக்கிரமித்துவிட்டதாக எந்த அடிப்படையில் கூறினீர்கள், இதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தலைவர் ராகுல் காந்தி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வியிடம், அவர் ஏன் இதை நாடாளுமன்றத்தில் பேசவில்லை ? ஏன் சமூக ஊடகங்களில் பேசுகிறார் என கேட்டனர். எதிர்க்கட்சித் தலைவராக அவர் அப்படி சொல்ல முடியாவிட்டால், ஜனநாயக உரையாடல் எவ்வாறு நடக்கும் என பதில் அளித்தார்.

இதைத் தொடர்ந்து லக்னோ ஐகோர்ட்டு அவதூறு வழக்கில் ராகுல் காந்தி அவர்களுக்கு எதிராக கீழ் நீதிமன்றம் நடவடிக்கைகளை எடுக்க சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். இது தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.

2020 ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் நமது வீரர்கள் நாட்டிற்காக வீரதீரமாகப் போராடி தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். ஆனால் அதற்கு பின்னர் பேசிய பிரதமர் மோடி, சீனா நமது எல்லைக்குள் ஊடுருவவில்லை என்று கூறினார். பொறுப்பேற்பதில் இருந்து தப்பிக்க மோடி அரசு எந்த சூழ்நிலையையும் உருவாக்கும் என்பது தெளிவாக தெரிகிறது.

ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு சீனா வெளிப்படையாக ஆதரவு அளித்த போதிலும் பிரதமர் மோடியிடமிருந்து எந்த பதிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் எல்லைப் பகுதியில் சீனாவின் ஊடுருவல்கள் பற்றி கேள்வி எழுப்பினால், அப்படி கேள்வி எழுப்பியவர்களை தேச விரோதிகள் என்று பா.ஜ.க. முத்திரை குத்தும் போக்கு தொடர்கிறது. இத்தகைய அவதூறுகளை தொடர்ந்து முன்னெடுத்து வரும் பா.ஜ.க.வினருக்கு கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசமைப்பு சட்டத்தில் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் வழங்கப்பட்டுள்ள கருத்துரிமை மற்றும் பேச்சுரிமைகளை நசுக்க, மோடி அரசு முன்னெடுத்து வரும் மிரட்டல்கள் மற்றும் வழக்குகளை காங்கிரஸ் பேரியக்கம் எதிர் கொண்டு, அவற்றை முறியடிக்கும் என்று உறுதி கூறுகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்