சிவகங்கை: அடைக்கலம் காத்த அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு திருவிழா
புரவிகளை அய்யனார் கோவிலில் இறக்கி வைத்து தீபாராதனை காட்டப்பட்டு பொதுமக்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.;
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம், மாந்தகுடிபட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆடி மாதத்தில் புரவி எடுப்பு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று விமரிசையாக நடைபெற்றது.
திருவிழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்து ஒரு மாத காலத்திற்கு முன்பாக வேளார் வம்சாவளியினரிடம் பிடிமண் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து வேளார் வம்சாவளியினர் கிராம மந்தையில் வைத்து குதிரை, யானை உள்ளிட்ட புரவிகளை செய்து சூளையில் வைத்தும், பின்னர் வர்ணம் தீட்டியும் தயார் செய்தனர்.
திருவிழா நாளான நேற்று கிராம மக்கள் ஒன்றிணைந்து கிராம மந்தையில் கூடி வழிபட்டு, கருப்ப சாமி சிலை முன்னே செல்ல, யானை, அரண்மனை குதிரை, ஊர் குதிரை, நேர்த்திக்கடன் குதிரைகளை தொடர்ந்து, நேர்த்திக்கடன் புரவிகளான காளை, மதலை, நாகம், பைரவர், எலி, பாதம், கண் உள்ளிட்ட நேர்த்திக்கடன் புரவிகளை சுமந்து சென்றனர். இந்த புரவிகளுக்கு பிள்ளையார் கோவிலில் வைத்து கிராம மக்கள் சார்பில் மாலை, வேட்டி அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் புரவிகளை சுமந்து சென்று வட்டக்குரை என்ற இடத்தில் இறக்கி வைத்து புரவிகளுக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அடைக்கலம் காத்த அய்யனார் கோவிலில் இறக்கி வைத்து மகா தீபாராதனை காட்டப்பட்டு பொதுமக்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பலர் கலந்து கொண்டனர்.