இந்த முறை என்னோட பிரசாரம் வேற மாதிரி இருக்கும்; பிரேமலதா விஜயகாந்த்

திட்டுவதும் குறை சொல்வதும் மட்டுமே அரசியல் இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.;

Update:2025-08-03 15:53 IST

சென்னை:

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: "உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற பிரசாரமும், விஜயகாந்தின் ரத யாத்திரையும் இன்று முதல் தொடங்குகிறது.

கும்மிடிப்பூண்டியில் தொடங்கி கன்னியாகுமரி வரை மூன்று கட்டப் பயணமாக எங்களுடைய பயணம் இருக்கும். இந்த முறை யாருடனும் இன்னும் கூட்டணி உறுதியாகவில்லை. 'என்ன பேசுவார்கள், யாரைத் திட்டுவார்கள், யாரைக் குறை சொல்வார்கள்' என்று நீங்கள் நினைக்கலாம். திட்டுவதும் குறை சொல்வதும் மட்டுமே அரசியல் இல்லை. என்னுடைய பிரசாரம் இந்த முறை வேறு மாதிரி வித்தியாசமாக இருக்கப் போகிறது. நாங்கள் எங்கு கூட்டணி அமைக்கிறோமோ, அந்தக் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். எங்கள் பிரசாரம் அதை நோக்கியே இருக்கும்" என்றார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை வரும் ஜனவரி மாதம் நடைபெறும் கட்சி மாநாட்டில்தான் அறிவிப்போம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். இத்தகைய சூழலில், அண்மையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை பிரேமலதா சந்தித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது.

நலம் விசாரிக்க மட்டுமே மு.க. ஸ்டாலினை சந்தித்ததாக பிரேமலதா கூறினாலும், இந்தச் சந்திப்பு அரசியல் ரீதியாக பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டுள்ளது. இத்தகைய சூழலில்தான் தனது பிரசாரத்தில் யாரையும் விமர்சிக்கப் போவதில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்