கவின் படுகொலை - சுர்ஜித் தாய்க்கு சம்மன்
கவின் படுகொலை வழக்கில் சுர்ஜித் பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.;
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலின இளைஞரான கவின், கடந்த மாதம் 27 அன்று நெல்லையில் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, அவரைக் கொலை செய்ததாக சுர்ஜித் என்ற இளைஞர் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார். சரணடைந்த சுர்ஜித், கவின் காதலித்து வந்த பெண்ணின் சகோதரர் என்பதும், கவின் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரைக் கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.சுர்ஜித் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
அவர்கள் இருவரும் சப்-இன்ஸ்பெக்டர்களாகப் பணியாற்றி வந்த நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், அவர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே கவினின் உடலை வாங்கி அடக்கம் செய்வோம் என உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அரசு அறிவித்த நிவாரண நிதியை கவினின் பெற்றோர் வாங்க மறுத்துவிட்டனர்.
இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. விசாரணை பாரபட்சமின்றி நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், வழக்கு விசாரணை வெளிப்படையாக நடைபெறுவதற்கு குற்றம்சாட்டப்பட்டவரின் பெற்றோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக டிஜிபி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கூறப்படும் சுர்ஜித்தின் தந்தை, காவல் உதவி ஆய்வாளர் சரவணன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அதன் பிறகே கவின் உடலை அவரது பெற்றோர் பெற்று தகனம் செய்தனர். துணை காவல் சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஸ் தலைமையிலான அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுர்ஜித்தின் நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில், மேலும் சில நாட்களுக்கு காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கவினின் பெற்றோரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் அழைத்து ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில், கவின் படுகொலை வழக்கில்,ஆகஸ்டு 15-ம் தேதிக்குள் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.