பனை, தென்னை மரங்களில் தீ: தூத்துக்குடியில் பரபரப்பு
இந்த தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்ட பனை, தென்னை மரங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.;
தூத்துக்குடி:
திருச்செந்தூர்- கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் குலசேகரன்பட்டினம் அருகேயுள்ள கல்லாமொழி பகுதியில் புதிய அனல்மின்நிலையம் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்்து வருகின்றன. தற்போது அங்கு பரிசோதனை ஓட்டங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த அனல்மினிலையம் அருகேயுள்ள சாகுல், சண்முகம் ஆகியோரது தோட்டங்களில் நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் திடீரென தீபிடித்து எரிந்தது. சுட்டெரித்த வெயில், காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவியது. தோட்டங்களின் வேலிகள், காய்ந்த ஓலைகளை தொடர்ந்து பனை, தென்னை மரங்களில் தீப்பிடித்து எரிந்தது.
சுமார் 30அடி உயர பனை, தென்னை மரங்களில் தீப்பற்றிய எரிய தொடங்கிய நிலையில், அந்த வழியே சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். மேலும், அனல்மின் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதியில் தீப்பிடித்து எரிந்த தகவல் அறிந்த திருச்செந்தூர் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் பாபநாசம் தலைமையில் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இத்தீவிபத்தில் 50-க்கும் மேற்பட்ட பனை, தென்னை மரங்கள் தீயில் கருகி சேதமடைந்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தீவிபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.