புதுக்கோட்டையில் வீடு புகுந்து 88 பவுன் நகைகள் திருட்டு
88 பவுன் நகைகள் மற்றும் 170 கிராம் வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை அன்னச்சத்திரம் ஜே.என்.நகரை சோ்ந்தவர் கதிரேசன். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கார்த்திகா (வயது 33). இவர் வீட்டில் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று தனது சகோதரியின் மகன் பிறந்தநாள் விழாவுக்காக கார்த்திகா, குழந்தைகளுடன் வீட்டை பூட்டி விட்டு பெங்களூரு சென்றார்.
பின்னர் நேற்று முன்தினம் இரவு கார்த்திகா வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் வெளியே சிதறி கிடந்தன.
மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 88 பவுன் நகைகள் மற்றும் 170 கிராம் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரித்து வருகிறார்கள்.