9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் கைது
தஞ்சாவூரில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
கோப்புப்படம்
தஞ்சை மாவட்டம் மேலக்கொட்டையூர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து சிறுமியின் தாயார் அந்த சிறுமியிடம் விசாரித்தபோது அந்த சிறுமிக்கு சிலர், பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்திருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து அந்த சிறுமியிடம், தாயார் மேலும் விசாரித்தபோது சிறுமியின் உறவினரான கும்பகோணம் பாபுராஜபுரம் லயன்கரை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (45 வயது), சிறுமியை ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ டிரைவரான புளியஞ்சேரி பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த மாதேஷ் (37 வயது), கும்பகோணம் மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்த நஜிமுதீன் (37 வயது) ஆகியோர் கடந்த மே மாதம் முதல் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருப்பது தெரிய வந்தது.
மகள் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் இதுகுறித்து கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ டிரைவரான மாதேஷ் உள்பட 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.