அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு தீபாவளிக்கு அற்புதமான சேலை வழங்கப்படும் - எடப்பாடி பழனிசாமி
2026 தேர்தலில் மக்களின் பெரும் ஆதரவால் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.;
புளியங்குடி,
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற எழுச்சிப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இன்று புளியங்குடியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:"
விவசாயிகளின் பயிர்க் கடனை இரண்டு முறை தள்ளுபடி செய்தது அ.தி.மு.க. அரசு. ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசாக 2000 ரூபாய் வழங்கினோம். அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் வந்தவுடன், வேலையில்லா இளைஞர்களுக்கு வேஷ்டி, சேலை உரிய நேரத்தில் வழங்கப்படும். தீபாவளிக் காலங்களில் அற்புதமான சேவைகள் வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவச் செல்வங்களுக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவை நிறைவேற்றுவதற்காக 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியது அ.தி.மு.க. அரசு.
தி.மு.க. ஆட்சியில் மூடப்பட்ட அனைத்து அம்மா மினி கிளினிக்குகளும் அ.தி.மு.க. ஆட்சியில் மீண்டும் திறக்கப்படும். தி.மு.க. ஆட்சி விவசாயிகளின் எதிரியாகச் செயல்படுகிறது.தி.மு.க-வை நாம் விமர்சித்தால், கம்யூனிஸ்டுகளுக்கு ஏன் கோபம் வருகிறது? கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களே, திராவிட முன்னேற்றக் கழகம் உங்களை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக் கொண்டிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: மக்களுக்கு என்ன பிரச்சினை என்பதை உணருங்கள். அவர்களுக்காகப் போராடுங்கள்.
மக்களின் துணையோடு அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்போது, திருமண உதவித் திட்டமும், தாலிக்குத் தங்கம் திட்டமும் தொடரும்."இவ்வாறு அவர் பேசினார்.