விஜய் என்ன மாறுபட்ட கொள்கையை வைத்துள்ளார்? - சீமான் கடும் தாக்கு
விஜயகாந்த் அரசியலுக்கு வந்த போது ஏற்படாத எழுச்சியா தற்போது ஏற்பட்டுள்ளது என்று சீமான் கேள்வி எழுப்பினார்.;
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தை மீட்போம், ஓரணியில் திரள்வோம் என்று சொல்கிறார்கள். தமிழகத்தை யாரிடம் அடமானத்தில் வைத்திருந்தார்கள்?. ஓரணியில் எதற்கு திரள வேண்டும்? நீட் தேர்வை ரத்து செய்வதற்கா? ஜி.எஸ்.டி. வரியை எதிர்ப்பதற்கா? தொகுதி மறுவரை என்ற பெயரில் தொகுதியை சீரழித்ததே கருணாநிதி தான். தேர்தல் வரும்போது பாசம், வேஷம் போட்டு நடிப்பார்கள்.
எனக்கு வயிற்றுப்பசி இல்லை. எனக்கு இருப்பது சுதந்திரப் பசி. சட்டமன்றத்தில் என் குரல் ஒலிக்க வேண்டும் என்றால் மக்கள் எனக்கு வாக்களித்து அனுப்ப வேண்டும். தற்காலிக தோல்விக்காக நான் நிரந்தர வெற்றியை இழக்க விரும்பவில்லை. நான் நம்பர் ஒன் பார்ட்டியாக வேண்டியவன். எந்த சித்தாந்தத்தை காப்பாற்ற நீங்கள் அனைவரும் கட்சியை ஆரம்பித்தீர்கள். என்னை விட்டு விடுங்கள். யார் அடித்தாலும் தாங்குவதற்கு ஒருவர் வேண்டும். எனவே என்னை விட்டு விடுங்கள்
2026ல் எந்தக் கட்சி ஆட்சி செய்ய வேண்டும், எந்த கட்சியை வீழ்த்த வேண்டும் என்பது மக்கள் முடிவு செய்வார்கள். திமுக வரவேண்டும் என்று யாரும் வாக்கு செலுத்துவதில்லை. திமுக தீய ஆட்சி என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும், அதை ஒழிக்க வேண்டும். திமுகவை எவ்வாறு அதிமுகவை வைத்து ஒழிக்க முடியும்.
அண்ணா வழியில் என விஜய் கூறுகிறார், அண்ணா வழியில் தான் 60 ஆண்டுகளாக தி.மு.க. பயணிக்கிறது. அண்ணா வழியில் அல்லாமல் வேறு எந்த வழியில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் பயணிக்கிறது.
அரசியலுக்கு வந்துள்ள விஜய் என்ன மாறுபட்ட கொள்கையை வைத்துள்ளார்? விஜயகாந்த் அரசியலுக்கு வந்த போது ஏற்படாத எழுச்சியா தற்போது ஏற்பட்டுள்ளது. விஜய் போல அவ்வப்போது புதிய கட்சிகள் கிளம்பத்தான் செய்யும்.
தமிழகத்தில் உள்ள வட இந்தியர்கள் அனைவரும் பாஜகவின் வாக்குகள்தான். பெருந்துறை, கோவை தெற்கில் வட இந்தியர்கள் வாக்களித்தால் வெற்றி என்ற நிலை உள்ளது. தமிழகத்தை இந்தி பேசும் இன்னொரு மாநிலமாக்க முயற்சி நடக்கிறது. வட இந்தியர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை தரக்கூடாது. நான் இருக்கும் வரை அது நடக்காது
இவ்வாறு அவர் கூறினார்.