தேனியில் மாடு மேய்க்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சீமான் தடுத்து நிறுத்தம்

தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்படுகிறார்கள் என சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.;

Update:2025-08-03 13:40 IST

தேனி,

கால்நடைகளுக்கான மேய்ச்சல் நில உரிமை கோரி தேனி மாவட்டம் போடி அருகே மாடு மேய்க்கும் போராட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார். அதன்படி, தனது கட்சிக்காரர்களுடன் மாடுகளை அழைத்துக்கொண்டு மலைப்பகுதிக்கு செல்ல சீமான் முற்பட்டார். அனுமதியின்றி போராட்டம் நடத்த முற்பட்ட சீமானை போலீசார் மற்றும் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருடன் சீமான் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மாடுகள் மேய்க்கும் போராட்டத்தின்போது சீமான் பேசியதாவது;

"கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லும் விவசாயிகளுக்கு வனத்துறையினர் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். கூரிய கொம்புகள் இருந்தும் மாடுகளால் போராட தெரியவில்லை. மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் சென்றால் மட்டுமே மலைப்பகுதி மற்றும் வனப்பகுதிகள் இருக்கும். வனப்பகுதியில் காட்டுத்தீ பரவுவது தடுக்கப்படும். மலைகளை பாதுகாக்க வேண்டுமெனில் அங்கு ஆடு, மாடுகள் மேய வேண்டும். நீரின்றி அமையாது உலகு எனில் ஆடு, மாடு இன்றி அமையாது காடு. 

இலங்கையில் நடந்ததை போல தமிழகத்திலும் இனப்படுகொலை நடக்கிறது. இலங்கையில் குண்டுகளை வீசி இனப்படுகொலை செய்தனர். தமிழகத்தில் குடிக்க வைத்து இனப்படுகொலை செய்துகொண்டிருக்கின்றனர். இலங்கையில் நடந்ததும், தமிழகத்தில் நடந்துகொண்டிருப்பதும் ஒன்றுதான். தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்படுகிறார்கள்." என்றார்.

 

Tags:    

மேலும் செய்திகள்