ஓ.பன்னீர்செல்வம் - நயினார் நாகேந்திரன் இடையே கருத்து மோதல்: தமிழிசை கருத்து
ஓ.பன்னீர்செல்வம் சற்று நிதானமாக செயல்பட்டு தனது அரசியல் நகர்வுகளில் ஈடுபட்டு இருக்கலாம் என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.;
சென்னை,
சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கேட்டு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி இருந்தார். ஆனால் அவருக்கு பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம், பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதுகுறித்து பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், என்னிடம் சொல்லி இருந்தால் பிரதமரை சந்திக்கும் வாய்ப்பை ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏற்படுத்திக் கொடுத்திருப்பேன் என தெரிவித்து இருந்தார். இதனை ஏற்க மறுத்த ஓ.பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரனை 6 முறை தொலைபேசியில் அழைத்தும், எனது அழைப்பை அவர் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால், தன்னையோ, எனது உதவியாளரையோ ஓ.பன்னீர்செல்வம் அழைக்கவில்லை என நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் - நயினார் நாகேந்திரன் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இதுகுறித்து பேசியதாவது;
"ஓ.பன்னீர்செல்வம் - நயினார் நாகேந்திரன் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. தலைவர்கள் போய் சொல்வதில். இதற்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. நயினார் நாகேந்திரனை குற்றம் சொல்வதை பாஜகவை சேர்ந்த நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். ஏதாவது கருத்து மோதல் இருந்தால் ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படையாகவே சொல்லியிருக்கலாம். ஓ.பன்னீர்செல்வம் சற்று நிதானமாக செயல்பட்டு தனது அரசியல் நகர்வுகளில் ஈடுபட்டு இருக்கலாம்." என்கிறார்.