மதுரை மாநகராட்சி வரி முறைகேடு வழக்கு: மேலும் 2 பேர் கைது
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;
மதுரை,
மதுரை மாநகராட்சி கமிஷனராக தினேஷ்குமார் பணியாற்றியபோது வரி வசூல் தொடர்பாக திடீர் ஆய்வு நடத்தினார். இதில், 2022-2023-ம் ஆண்டுகளில் ரூ.150 கோடி வரை வரி வசூலில் மோசடி செய்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகார்கள் எழுந்தன. இந்த முறைகேடு குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் சைபர் கிரைம் போலீசார் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த முறைகேடு தொடர்பாக மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், ஓய்வுபெற்ற உதவி கமிஷனர் ரெங்கராஜன், ஒப்பந்த ஊழியர்கள் தனசேகரன், சதீஷ், கார்த்திகேயன், இடைத்தரகர்கள் ஷாகா உசேன், ராஜேஷ்குமார், முகமது நூர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்கள் வாசுகி, சரவண புவனேசுவரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, சுவிதா, நகரமைப்பு குழு தலைவர் மூவேந்திரன், வரிவிதிப்பு குழு தலைவர் விஜயலட்சுமி ஆகிய 7 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்து உள்ளனர்.
இந்த வழக்கில் கைதான இடைத்தரகர்கள் ஷாகா உசேன், ராஜேஷ்குமார், முகமது நூர், ஒப்பந்த பணியாளர் சதீஷ், ஓய்வுபெற்ற உதவி கமிஷனர் ரெங்கராஜன் ஆகியோர் ஜாமீன் கேட்டு, மதுரை மாவட்ட முதன்மை கோர்ட்டில் மனு செய்தனர். அந்த ஜாமீன் மனுவை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக கவுன்சிலரின் கணவர் கண்ணன், ஒப்ப்ந்த ஊழியர் செந்தில்பாண்டி ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.