திருப்பத்தூரில் பள்ளியின் கிணற்றில் 11ம் வகுப்பு மாணவன் சடலம் மீட்பு

திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் தங்கி இருந்து முகிலன் என்ற மாணவன் 11ம் வகுப்பு படித்து வந்தார்.;

Update:2025-08-03 11:41 IST

திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் தங்கி இருந்து முகிலன் என்ற மாணவன் 11ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த ஒன்றாம் தேதி முதல் வகுப்புக்கு வரவில்லையாம். வீட்டிற்கும் செல்லவில்லை என்பதால் அம்மாணவனின் பெற்றோர் திருப்பத்தூர் நகர போலீசில் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து மாணவனின் பெற்றோர் மற்றும் போலீசார் அம்மாணவனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் உள்ள முகப்பு மூடப்பட்ட நிலையில் உள்ள கிணற்றில் ஒரு மாணவன் உடல் இறந்த நிலையில் கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற திருப்பத்தூர் நகர போலீசார் அந்த மாணவன் உடலை கிணற்றில் இருந்து வெளியே எடுத்து வந்து பார்த்தபோது அது காணாமல் போன மாணவன் முகிலன் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட அம்மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் மேல்பாகம் மூடப்பட்ட நிலையில் இருந்த கிணற்றுக்குள் மாணவன் சடலம் கிடந்தது எப்படி, மாணவனின் இறப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்