'எனது அழைப்பை ஏற்கவில்லை..' ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு

ஓ.பன்னீர்செல்வம் பற்றி குறை கூற மாட்டேன் என நயினார் நாகேந்திரன் கூறினார்.;

Update:2025-08-03 09:57 IST

ஈரோடு,

சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கேட்டு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி இருந்தார். ஆனால் அவருக்கு பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம், பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதுகுறித்து பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், என்னிடம் சொல்லி இருந்தால் பிரதமரை சந்திக்கும் வாய்ப்பை ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏற்படுத்திக் கொடுத்திருப்பேன் என தெரிவித்து இருந்தார். இதனை ஏற்க மறுத்த ஓ.பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரனை 6 முறை தொலைபேசியில் அழைத்தும், எனது அழைப்பை அவர் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் பவானியில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்து நயினார் நாகேந்திரன் கூறியதாவது;

" ஓ.பன்னீர்செல்வத்தை நான் தொடர்பு கொண்டேன். அவர் என்னை அழைக்கவே இல்லை. என்னையோ, எனது உதவியாளரையோ அவர் அழைக்கவில்லை. நான்தான் அவரை தொடர்புகொண்டேன். அவர் கடிதம் அனுப்பி இருப்பதாகக் கூறுவது எனக்குத் தெரியாது. அந்த கடிதம் இன்னும் என்னை வந்து சேரவில்லை. ஒரு முடிவை எடுத்து விட்டு, தற்போது காரணத்திற்காக இவ்வாறு கூறுகிறார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்னைப் பற்றி குறை கூறினாலும், நான் அவரைப் பற்றி குறை கூற மாட்டேன்."

இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்